அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவது போன்றும், அமெரிக்க தேசிய கொடி தீப்பற்றி எரிவதும் போன்ற சர்ச்சைக்குரிய காணொளி பதிவை வடகொரிய ஊடகம் ஒன்று நேற்று வெளியிட்டுள்ளது.
வடகொரியா நிறுவனர் கிம் இரண்டாம் சங்கின் 105வது பிறந்தநாள் கொண்டாட்டம் அண்மையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டிய இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வடகொரியாவின் ஜனாதிபதி Kim Jong Un உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இசை நிகழ்ச்சியில் அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
அத்துடன், அமெரிக்காவின் தேசியக் கொடி தீப்பற்றி எரிவது போன்ற காட்சியும் அந்த காணொளியில் இடம்பெற்றிருந்தது. குறித்த இசை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியை வடகொரிய ஊடகம் ஒன்று நேற்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், வடகொரியாவின் மிலேச்சத்தனமான இந்த செயலுக்கு பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், இது அமெரிக்காவை ஆத்திரமூட்டும் செயற்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா அண்மைய காலங்களில் பல அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.
இதனையடுத்து, விமானங்களை தாங்கிய போர் கப்பல் ஒன்றை கொரியா தீபகற்பத்திற்கு அனுப்பியிருந்த அமெரிக்கா, தென் கொரியாவுடன் இணைந்து இராணுவ ஒத்திகை நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், வடகொரியா விடயத்தில் இனியும் பொறுமைகொள்ள முடியாது என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




-tamilwin.com

























