மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்பதே தற்போது அனைவராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
எப்போதும் காணப்படாத அளவிற்கு பகிரங்கமான போர் ஒத்திகைகளும், எச்சரிக்கைகளும் இப்போது எல்லை கடந்து நிற்கின்றது.
அந்த வகையில் போருக்கு முறுக்கிக் கொண்டு நிற்கும் நாடுகளில் அமெரிக்காவும், வட கொரியாவும் முன்நிற்கின்றன. இங்கு ஏனைய நாடுகள் இலாபம் ஈட்டும் முயற்சியில் இருக்கின்றன.
ஒரு வகையில் வடகொரியா ஆரம்பம் முதலாகவே அமெரிக்காவிற்கு விளையாட்டு காட்டிக் கொண்டு வந்தாலும் கூட, இப்போது போல் அமெரிக்காவை எதிர்க்கும் அளவு துணிவு இருக்கவில்லை.
வடகொரியா புதுப் புது ஆயுதங்களை உருவாக்கியதாக பகிரங்கமாக தெரிவித்தாலும், அமெரிக்காவிடம் அதனை விடவும் சக்திமிக்க ஆயுதம் இல்லாமல் இல்லை.
ஆனாலும் அமெரிக்கா வடகொரியாவை தாக்க நினைத்தால் வடகொரியா பக்கம் ரஷ்யாவின் ஆதரவு இருக்கும் என்றே கூறப்படுகின்றது.
எது எப்படி வேண்டுமாகவும் போகட்டும். அடிப்படையில் பார்க்கும் போது வடகொரியாவிற்கு அமெரிக்காவை எதிர்க்கும் அளவு பலம் உள்ளதா என்பது சந்தேகமே.
ஆனால் இந்த போர் விளையாட்டை ஆரம்பித்ததில் முக்கிய பங்களிப்பு அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கின்றது. ரஷ்யா அமெரிக்காவை எதிர்க்க முக்கிய காரணம் சிரியாவே வட கொரியா அல்ல.
சிரியாவின் மீது அமெரிக்காவின் கண்ணோட்டமே ரஷ்யாவின் எதிர்ப்பிற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு சிரியாவை அமெரிக்கா ஏன் தாக்க வேண்டும்? சிரியாவைத் தாக்கினால் ரஷ்யாவின் எதிர்ப்பு வரும் என்பது தெரியாத அளவு அமெரிக்காவின் நிலை ஒன்றும் தாழ்ந்து விட வில்லை.
சிரியாவை அமெரிக்கா தாக்க காரணம் தான் என்ன? சிரியாவின் வங்கி எந்த உலகப் பொருளாதார நிறுவனத்தையும் சார்ந்தது இல்லை. தன்னிச்சையான வங்கி சிரியாவின் வங்கி.
அதே போன்று சிரியாவிற்கு உலக வங்கியில் கடன் எதுவும் இல்லை. மேலும் செயற்கை பயிர் விதைகளையும் தடை செய்துள்ள நாடும் சிரியாவே.
சிரியாவிடம் சொந்தமாக பெட்றோலியம் மற்றும் எரிவாயு போன்ற வளங்களும் உள்ளன. இவற்றில் பிரதானமானது சிரியா அமெரிக்காவில் டொலரின் மதிப்பை வீழ்ச்சியடையவும் செய்கின்றது.
இந்த காரணங்களினால் தான் சிரியா மீது தன் போர்ப்பார்வையை அமெரிக்கா திருப்பியதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தில் அல்லது டொலரில் யார் கை வைத்தாலும் அமெரிக்கா விட்டு வைக்காது எப்படியாவது அழித்தே தீரும். அந்தளவு மோசமானது அமெரிக்கா.
உதாரணமாக டொலருக்கு பதில் தங்கத்தினை கேட்டதால் லிபியா அழிக்கப்பட்டது. கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார். சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டார்.
ஏன் இலங்கை உள்நாட்டுப் போரில் கூட அமெரிக்காவை விடுதலைப் புலிகள் ஒதுக்கியதாலேயே தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க அமெரிக்காவும் இணைந்து கூட்டுச் சதி செய்தது.
அது மட்டுமல்ல இன்று வரை 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பென்டகன், இரட்டைக் கோபுர தாக்குதல் கூட அமெரிக்கா நடத்திய நாடகம் என்ற குற்றச்சாட்டு ஒன்றும் இருக்கத்தான் செய்கின்றது.
இப்படி உலகின் பல யுத்தங்களுக்கு காரணமாய் அமைந்தது அமெரிக்காவே. ஆனால் வெளி உலகிற்கு அவை மறைக்கப்பட்டது மாற்றப்பட்டது.
இப்போது காணப்படும் யுத்த சூழலும் கூட அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள ஒன்றாகவே இருக்கக் கூடும்.
காரணம், அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு பின்னர் பலத்தில் பின்வாங்கி விட்டதாக ஓர் கருத்து உண்டு. அதனை பொய்யாக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு இருக்கத்தான் செய்கின்றது.
மற்றொரு பக்கம் சீனா தன் ஆயுத பலத்தை முன்னர் காட்டிய அளவு வீரத்தை இப்போது காட்டவில்லை என்பதே உண்மை. இடை நடுவில் ரஷ்யா அமெரிக்காவிற்கு எதிராக இருப்பதாக கூறப்படுகின்றது.
இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ஆதரவு நாடு என்ற காரணத்துக்காக காஸாவில் அப்பாவி மக்கள் அழிக்கப்பட்ட போது அனைத்து உலக நாடுகளும் அந்த இன அழிப்பு யுத்தத்தை கண்டும் காணாமலும் துணை நின்றன.
இஸ்ரேலை கேள்வி கேட்க எவரும் முன் வர வில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது. காரணம் இங்கு பின் நின்றது அமெரிக்கா எனும் வல்லரசு.
இப்போதும் கூட சிரியா மீது அமரிக்காவின் தாக்குதலையும் கூட எந்த நாடுகளும் பாரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் ரஷ்யா களம் இறங்க ஆயத்தமாக உள்ளதாக தகவல்.
அதற்கு காரணம் அமெரிக்காவின் இடத்தை கைப்பற்ற ரஷ்யா முயன்று கொண்டு வருகின்றது. சீனாவிற்கும் அந்தக் கனவு உள்ளது. அதன் காரணமாக போர் சூழலே அதிகரித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகவும் வலிமையடைந்த அமெரிக்கா, தன் ஆயுத பலத்தினை கடந்த 70 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளது.
அதேபோன்று பொருளாதார ரீதியிலும் பலம் கொண்டதாக மாறி விட்டது. ஆயுதம், பொருளாதாரம் என்று இரண்டிலும் வலிமையுடன் இருக்கும் அமெரிக்கா, எந்தவொரு நாட்டிற்குள்ளும் புகுந்து சர்வ சாதாரணமாக ராஜ்ஜியம் செய்வதற்கான சக்தியைக் கொண்டுள்ளது.
அதனையே இப்போது அரங்கேற்றிக் கொண்டு வருகின்றது. உலகில் நடைபெற்ற அனைத்து உள்நாட்டு யுத்தத்திலும் கூட அமெரிக்காவின் சதியும், தலையீடும் அதிகம் இருக்கும்.
அந்த வகையில் மீண்டும் ஓர் உலக யுத்தத்தை ஏற்பாடு செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவே செய்திகள் கூறுகின்றன.
மேலும் இந்த போர்ச் சூழலில் கூடிய விரைவில் ஓர் உலக யுத்தம் ஏற்படக் கூடும் என்பதனை எதிர்பார்த்தே அனைத்து நாடுகளும் ஆயுதங்களை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.
பல லட்சம் கோடிகளைக் கொட்டி அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் உருவாக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. அப்படியான ஆயுதங்களும் தாக்குதல்களுக்கு தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
எது எப்படிப் போனாலும் அடுத்த உலக யுத்தம் ஏற்பட்டு விடுமானால் ஏற்கனவே உலகம் பார்த்த யுத்தங்கள் போன்று இருக்காது மிகக் கோரமாக அமைந்து போகும்.
அணு ஆயுதத்தாக்கம் கூட அதிகமாக இருக்கும். வட கொரியாவின் எச்சரிக்கை, அமெரிக்காவிற்கு விடுத்த எச்சரிக்கை மணி அல்ல.
அது பூமிக்கே அடிக்கப்பட்ட அபாய மணியாகத்தான் அமைந்து விடும். உலகம் பாரிய அழிவினை சந்திக்கக் கூடும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஆனாலும் இதனை எதிர்கொள்ளும் பொருட்டு உலக நாடுகள் பதற்றத்தில் இருப்பதாகவும் மேலைத்தேய செய்திகள் கூறுகின்றன.
நாடுகளின் அதிகார யுத்தத்தில் பலியாகப் போவது கோடிக்கணக்கான மனித உயிர்களே என்பது மட்டும் மறுக்க முடியாத வாதமே.
-tamilwin.com