ஒரே நாளில் 11 பேர் பலி: வெனிசுலாவில் வெடித்த போராட்டத்தால் பெரும் நெருக்கடி

வெனிசுலா ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் இதுவரை 11பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிசுலா ஜனாதிபதியை பதவி விலக்கோரி அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்றைய தினம் அங்கு போராட்டம் தீவிரமடைந்ததில், 11பேர் பலியாகினர்.

எண்ணெய் வளம் நிறைந்த நாடு வெனிசுலா. எனினும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவினை அடுத்து அங்கு பணவீக்கம் அதிகரித்தது.

இந்நிலையில், அன்றாடம் வாங்கும் பொருட்களாகிய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்தனர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எதிர்க் கட்சியினர் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்களை தற்போதைய வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யக்கோரியும், நிக்கோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் நடந்து வருகின்றது.

முன்னதாக நேற்று முன்தினம் மத்திய கராகஸ் மற்றும் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் தங்கள் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாருக்கும் போராட்டக்காரருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த மோதலிலேயே அவர்கள் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வெனிசுலாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com