உலக மக்களை காப்பாற்ற வட கொரியாவிற்கு எதிரான யுத்தத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பங்கேற்க கனடா ராணுவமும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரியா தீபகற்பத்திற்கு அமெரிக்காவின் போர்க்கப்பல் அனுப்பப்பட்ட நாள் முதல் யுத்தம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வட கொரியாவின் எல்லையில் சீனா தனது ராணுவ தளவாடங்களை நிலை நிறுத்தியுள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவிற்கு ஆதரவாக ராணுவ பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வட கொரியாவால் யுத்தம் ஏற்படும் சூழல் உருவானால் ஐக்கிய நாடுகளுக்கு உதவும் வகையில் கனடா ராணுவமும் யுத்தத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் 1953-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளுடன் கனடா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடந்த ஏப்ரல் 10-ம் திகதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வட கொரியாவின் அத்துமீறல்களை கடுமையாக கண்டித்துள்ளார்.
அப்போது, ‘வட கொரியாவில் நிகழும் அசாதாரண சூழல் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகளையும் பெரிதளவில் பாதிக்கும். இதனை தவிர்க்க அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும்’ எனப் பேசியுள்ளார்.
இதன் மூலம், எதிர்காலத்தில் வட கொரியாவிற்கு எதிரான யுத்தத்தில் கனடா ராணுவமும் ஐக்கிய நாடுகளுக்கு ஆதரவாக பங்கேற்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com