போருக்கு தயாராகுங்கள்! அமெரிக்க விமானம் தாங்கிய போர்க் கப்பல் தகர்க்கப்படும்! வடகொரியா மிரட்டல்

north_south_001அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர்க் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயாராக இருப்பதாக வடகொரியாக மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனைக்கு சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் அந்நாடு அதிலிருந்து இம்மியும் பின்வாங்குவதாக தெரியவில்லை.

அமெரிக்கா தன்னுடைய கடும் எச்சரிக்கையை விடுத்தும், அதற்கு தன்னுடைய பதிலாக சோதனையை முயற்சியினை காட்டியிருந்தது வடகொரியா.

எனினும் அந்தப் பரிசோதனை நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது. ஆனால், அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியிருப்பதாக அந்நாடு குறிப்பிட்டிருந்தது. அடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் பரிசோதனையை அடுத்த மாதம் நடத்த இருப்பதாக தெரிகிறது.

ஆனால். தென்கொரியா, ஜப்பான் சீனா போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், வடகொரியாவில் நாளை மறுநாள் இராணுவத்தின் 85வது நிறுவன நாள் விழா அதிக பாதுகாப்பில் கொண்டாடப்படவுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தனது நாட்டு இராணுவ நிறுவன விழாக்களின் போது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது வழமையாக இருந்துவருகிறது.

இந்நிலையில், அதேபோன்று இம்முறையும் ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அமெரிக்கா அஞ்சுகிறது.

எனவே அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கார்ல் வின்சல் என்ற மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல், ஜப்பான் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக கொரிய கடற்பகுதிக்கு பயணித்து வருகிறது.

அணுஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தும் வடகொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், திடீரென தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ளும் வகையிலும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

இதற்கிடையில், வடகொரியா தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவை எதிர்க்கொள்ளவும், அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க் கப்பலை மூழ்கடிக்கவும் தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இதுவொரு புறமிருக்க, சர்வதேச ஊடகங்கள் போர் பற்றியதான செய்திகளை அதிக முக்கியத்துவம்கொடுத்து வருகையில், சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒரு செய்தியை அந்நாட்டு இராணுவத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகள் போருக்கு தயாராவது குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இன்று மாறும் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். போருக்கான எச்சரிக்கையுடன் எப்போதும் தயாராக இருப்பது அவசியமாகும்.

ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. எனவே போருக்கு தயாராகக் கூடிய சூழலில் விழிப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 -tamilwin.com