ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறிய வகையில் விரைவில் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக வட கொரியா மிரட்டியுள்ளது.
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்தநாடு தொடர்ந்து 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து சோதித்தது.
இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்நாடு இதுவரை ஐந்து முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.
இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஒன்றாக இருந்த கொரியாவில் இருந்து வடகொரியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்கிய (மறைந்த) கிம் யோ சங்-கின் 105-வது பிறந்தநாள் விழாவையொட்டி வடகொரியா தலைநகரான பியாங்யாங் நகரில் சமீபத்தில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சக்தி வாய்ந்த போர் ஆயுதங்கள், ராணுவ டாங்கிகள் மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இந்த பிரமாண்ட அணிவகுப்பு அந்நாட்டு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகியது.
இந்த அணிவகுப்பை தொடங்கி வைத்து உரையாற்றிய அந்நாட்டின் இரண்டாம் நிலை தலைமை அதிகாரியும், ஆளும்கட்சி தலைவரும், ராணுவ தளபதியுமான சோய் ரியாங்-ஹே,
‘வடகொரியா மீது தொடுக்கப்படும் நேரிடையான எவ்விதப் போரையும் நேரடியாக சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்பதை இன்றைய அணிவகுப்பு உறுதிப்படுத்தும்.
நம்மீது நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதலுக்கும், நமக்கே உரிய பாணியில் சரியான பதிலடி கொடுப்போம்’ என்று குறிப்பிட்டார்.
அந்த அணிவகுப்பை தொடர்ந்து வெகு விரைவில் ஆறாவது முறையாக அணு ஆயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வட கொரியாவின் அத்துமீறல் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரியாவின் கொட்டத்தை அடக்க ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட்டுவிட முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இன்று பதிலளித்துள்ள வட கொரொயா நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்,
“அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அணு ஆயுத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவகை தாக்குதலுக்கும் தங்கள் நாடு தங்களது நாடு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எங்கள் நாட்டு அதிபர் உத்தரவிட்டால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தாக்குதலை தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
– Maalai Malar