ஏற்ற சபதத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் மகிந்த அணியினர். இம்முறை மே தினக் கூட்டத்தில் காலி முகத்திடலை மறைக்கும் அளவிற்கு கூட்டம் கூடும் என்றும் எமது பலத்தை நிரூபிப்போம் என்றும் கூட்டு எதிர்க் கட்சியினர் சபதம் எடுத்திருந்தார்கள்.
அந்தச் சபதத்தை மிக வெற்றி கரமாக நிரூபித்துக் காட்டியும் இருக்கிறார்கள். இது வெறுமனே மே தினக் கூட்டமாக கருதிவிட முடியாது.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் இலங்கையில் அரசியல் கட்சிகள் கூட்டும் மேதினக் கூட்டமானது ஒடுக்கப்படும் பாட்டாளி மக்களின் குரலாக ஒலிக்கிறதோ இல்லையோ, அவை அரசியல் கட்சிகளின் செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் வெளிக்காட்டுவதற்கான ஒரு ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.
அது தான் இம்முறை நடந்த மே தினக் கூட்டத்திலும் நடந்திருக்கிறது. காலி முகத்திடலில் கூடிய கூட்டமும் அதைத் தான் புடம்போட்டுக் காட்டியிருக்கிறது.
கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சரிவு என்பது அவர் மட்டுமல்ல, பெரும்பான்மை சிங்கள மக்களும் எதிர் பார்த்திருக்கவில்லை. அதேபோன்று மைத்திரிபால சிறிசேன தரப்பினரும் தாம் வெற்றி பெறுவோம் என்னும் சந்தேகத்தில் தான் இருந்தனர்.
எனினும் மகிந்தவின் தோல்வியையும், மைத்திரியின் வெற்றியையும், வடக்கு, கிழக்கு, மலையக தமிழ், இஸ்லாமிய மக்கள் தான் சாத்தியப் படுத்தினார்கள். இவர்களின் வாக்குக்கள் தான் இருவரின் அரசியல் பாதையை அல்லது நாட்டின் தற்கால அரசியல் சூழ்நிலைகளை மாற்ற பயன்பட்டன.
கடந்த 2015ம் ஆண்டு எவருமே எதிர்பார்க்க முடியாத அந்த மாற்றம், எல்லாவற்றையும் தலைகீழாகப் தூக்கிப்போட்டது. குறிப்பாக இலங்கை போர்க் குற்ற விசாரணை என்பது தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று நினைத்திருக்கையில், சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று எதிர் பார்க்கையில், அவை தவிடு பொடியாக்கப்பட்டன.
ஆட்சி ஏற்ற அரசாங்கம் இராஜதந்திர நகர்வுகளை மிக நூதனமாக நகர்த்தியது. பெரும்பாலான தடைகளை நீக்கியது. மகிந்த காலத்தில் இழந்து போன தங்கள் சர்வதேச உறவுகளை மீளக் கட்டியமைத்துக் கொண்டது.
இது மைத்திரி, ரணில், மங்கள கூட்டணியால் மாத்திரமே சாத்தியமானதொன்று. அதனை யாராலும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இருக்காத சர்வதேச உறவுமுறை மைத்திரி ரணில் ஆட்சியில் ஏற்பட்டது.
இந்த ஆட்சி மாற்றம் என்பது மகிந்தவிற்கு எதிரானதாக இருந்ததா? தமிழர்களுக்கு சாதகமானதாக இருந்ததா? இல்லை மைத்திரி ரணில் தரப்பிற்கு மிகப் பெரும் பலமாக இருந்ததா? போன்ற கேள்விகள் எழுப்பபடுமாயின், அது தமிழர்களின் வீழ்ச்சிக்கும், அவர்களின் நீதிக்கோரிக்கைக்கான ஏமாற்றத்திற்கும் தான் வித்திட்டது என்பதை உணர முடியும்.
சர்வதேச விசாரணை நடத்தப்படும், அது தொடர்பில் உலக நாடுகள் தமிழர் தரப்பிற்கு ஆதரவாக இருக்கும் என்கிற நிலையிருந்தது மகிந்த ராஜபக்ச ஆட்சி இழக்கும் வரை. ஆனால் ஆட்சியை இழந்த அவர், ஹம்பாந்தோட்டைக்குப் போன பின்னர், அதை தலைகீழாக மாற்றினார்கள். சர்வதேச நாடுகளின் தலைவர்களும் சரி இலங்கைத் தலைவர்களும் சரி.
இந்நிலையில், தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும், அது மகிந்த, மைத்திரி, ரணில் போன்றவர்களின் வெற்றிக்கனியாக பார்க்க முடியும். அது தான் யதார்தம்.
எனினும் மகிந்த ராஜபக்ச தனக்கு ஏற்பட்ட அந்தச் சரிவு என்பது சர்வதேசத்தின் முன் தனக்கு இருக்கும் சிக்கல்களை களைந்து எடுக்கும் பொறுப்பை ரணிலிடம் கொடுத்த காலமாகவே நோக்கமுடியும்.
அந்தச் சிக்கல்கள் மெல்ல களையப்பட்ட வேளையில், மகிந்தவின் எழுச்சியும் கை கூடிவருகிறதோ என்னும் சிந்தனையை தோற்றிவித்துள்ளது.
நேற்றைய தினம் மே தினத்திற்கு கூடிய கூட்டம் சாதாரண பாடத்தைச் சொல்லிச் செல்லவில்ல. அது மகிந்த ராஜபக்சவின் எழுச்சியை பறைசாற்றி நிற்கிறது.
தேர்தல் தோல்வி என்பது அரசியல்வாதிகளுக்கு புதிதானவை அல்ல. ஆயினும் மகிந்த ராஜபக்ச இந்தத் தோல்வியை ஹம்பாந்தோட்டையில் தனக்கு சாதகமாகவும் சிங்கள மக்களின் பகையாளிகளாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மீண்டும் நிரூபிக்கப்பயன்படுத்தியிருந்தார்.
சிறிது கால ஓய்விற்குப் பின்னர் கிராமங்கள், விகாரைகள், ஆலயங்கள் என்று பழைய அரசியல் பாணியினைக் கையில் எடுத்திருந்தார்.
இவை தவிர, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் மைத்திரி அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளை அரசியல் பழிவாங்கல்கள் என்று மிக லாபகமாக சிங்கள மக்களிடத்தே கொண்டு சேர்த்தார்.
புலிகளை அழித்து, நாட்டை மீட்டெடுத்த எனக்கும், எமது படை வீரர்களுக்கும் இந்த அரசாங்கம் கொடுக்கும் பரிசு இது. நாட்டிற்காக தியாகம் செய்த எம்மை இன்று பெரும் இடர்பாட்டிற்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்கின்றார்கள் என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.
இது அவருக்குச் சார்பான ஊடகங்கள் வாயிலாக திரும்பத் திரும்பத் சாதாரண ஏழை கிராம மக்களிடம் பரப்பட்டது. மே தினக் கூட்டத்திற்கு வந்தவர்கள் கூட நகரத்தினரைக் காட்டிலும் கிராமப் புற மக்கள் என்பது தான் கணிப்பாக இருக்கிறது.
ஆக, மகிந்த ராஜபக்சவின் அதி முக்கியமான செல்வாக்கு என்பது ஏழைக் கிராமமட்ட மக்களிடத்தே இன்னமும் சிதையாமல் இருக்கின்றது என்பதனை இந்த மேதினக் கூட்டம் பறைசாற்றி நிற்கிறது.
இது மாத்திரம் காரணமல்லாது, மைத்திரி ரணில் அரசின் மீது பல்வேறு தரப்பினரும் அதிருப்தியி்ல இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் அமைப்பு விவகாரம், சமஷ்டி, கூட்டமைப்போடு ரணில், மைத்திரியி்ன் தொடர்பு, கூட்டமைப்பை எதிர்க் கட்சியாக மாற்றியமை போன்ற இன்னோரென்ன விடயங்களும் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பாக மாறியிருக்கிறது. அது மகிந்தவிற்கு சாதகமாகியிருக்கிறது.
எனவே, மே தினக் கூட்டம் என்பது தனியே பொதுக் கூட்டம் என்று சொல்விட்டுக் கடந்து செல்லமுடியாது. அது மகிந்த ராஜபக்சவின் எழுச்சியையும், மீள்ச்சியையும் புடம்போட்டுக் காட்டி நிற்கின்றது. இன்றைய அரசாங்கத்தின் மீது தென்னகத்தின் பெரும்பான்மையானவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச குடும்பத்தோடு இறங்க வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே நாங்கள் தவறுகளில் இருந்து மீண்டு, இந்த நாட்டை சரியான பாதையில் கொண் சேல்வோம் என்று குறிப்பிட்டு இருந்தது மகிந்த தரப்பு. மக்களின் அடிமனதை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
அதற்கான பேரம் பேசுதல்களும் நடந்து கொண்டிருப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, மகிந்த ராஜபக்ச தன்னுடைய வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து கொண்டிருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.
இது நாட்டிற்கு எந்தளவிற்கு சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்பதை அடுத்த சில ஆண்டுகள் உறுதிப்படுத்தும்.