இலங்கை வாழ் தமிழீழ மக்கள் சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை தெற்கின் சீர்திருத்தவாதிகள் உட்பட யாராலும் மறுக்க முடியாது.
யாராவது, தமிழ் மக்கள் ஏமாற்றப்படவில்லையென கூறுவார்களேயானால் மிக யாதார்த்தமான உண்மை ஒன்றின் அடிப்படையில் பார்ப்பதானால், 1948ஆம் ஆண்டு இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து, தமிழீழ மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு, இன்று வடக்காகவும், வடக்கு யாழ்ப்பாணமாகவும் கூறு போடப்பட்டுள்ளதை காண முடியும்.
அன்று முதல், எமது அடிப்படை உரிமைகள், அரசியல் அபிலாசைகளை சாத்வீகம், ஆயுதம் ஆகியவை மூலம் வென்றெடுப்பதற்காக மேற்கொண்ட போராட்டங்கள் வெற்றி பெறாத நிலையில், இன்று இராஜதந்திர போராட்டம் மூலம் ஏதோ ஒரு வகையில், தமிழீழ மக்களிற்கான நியாயத்தை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் பயணிக்கின்றோம்.
இராஜதந்திர போராட்டம் என்பது நிச்சயம் கேள்வி ஞானத்தினலோ, உணர்ச்சிவச அடிப்படையில் மேற்கொள்ளும் செயற்பாடு அல்ல. இதற்கு ஏட்டு கல்வி, மதிநுட்பம், ஆராயும் தன்மை, ஆளுமை ஆகியவை இல்லாது மேற்கொள்ள முடியாது.
இவற்றின் அடிப்படையில் பயணிக்க தவறும் கட்டத்தில், மீண்டும் அப்பாவிகளான தமிழீழ மக்கள் பாதாள குழிகளில் தள்ளப்படுவார்கள்.
ஆகையால் இவற்றை எப்படியாக அணுக முடியும் என்பது பற்றி, உலகில் எம்மை போன்று தமது அரசியல் விடுதலைக்காக செயற்பட்ட, செயற்படும் மற்றைய இன மக்களின் அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் அவ்வின மக்களுடனான நட்பு மட்டுமல்லாது, இராஜதந்திரிகள் மட்டத்தில் செல்வாக்கு நிறைந்தவர்களாக நாம் விளங்க வேண்டும்.
தமிழீழ மக்களின் அரசியல் உரிமையும் அதற்கான செயற்பாடு என்பது தற்சமயத்தில், முற்கள் நிறைந்த ரோஜா செடியில் விழுந்துள்ள சேலையாக காணப்படுகிறது.
ஆகையால் இதை மிகவும் சாதுர்யமாக தளர்த்தி கொள்ள தவறும் கட்டத்தில், எமது உரிமை போராட்டம் என்பது பகல் கனவாகும்.
இதை மிகவும் சாதுர்யமாக வென்றெடுப்பதற்கு ஒரு சில வழிகள் உண்டு. இதை மேற்கு நாட்டவர்கள், “எல்லா கதவுகளும் பூட்டப்பட்டுள்ளன, ஆனால் ஓர் ஜன்னல் மட்டுமே திறந்துள்ளது என்பார்கள்”.
அப்படியானால் அந்த ஜன்னல் எங்கு உள்ளது, அதன் மூலம் எப்படியாக நாம் எமது இலக்கை அடைய முடியும் என்பதை நாம் ஆக்க பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
தொடர்ந்து சிறிலங்காவின் மாறுபட்ட அரசுகளை நம்புபவர்கள் நிச்சயம் தமிழீழ மக்களின் எஞ்சியுள்ள இருப்பிற்கும் உலை வைப்பார்கள் என்பதே உண்மை. இப்படியான நபர்களை நாம் அலட்சியம் செய்து எமது ஆக்கபூர்வமான பாதையில் நாம் திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.
இவற்றிற்கு உள்ள வழிகள் இரண்டு. ஒன்று உள்நாட்டில் உள்ள மக்கள் தமது அர்ப்பணிப்பு நிறைந்த சாத்வீக போராட்டங்களை அரச படைகளின் கொடூரங்களிற்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுப்பது.
இதற்கு நல்ல உதாரணமாக விளங்குவது, 1979ஆம் ஆண்டு வெற்றி கண்ட ஈரானிய மக்கள் புரட்சி. எந்தவித பீதியுமின்றி, ஆயுதங்களின்றி பாரிய ஆயுதங்களுடன் வீறு நடை போட்ட ஈரானிய அரச படைகளை எதிர்கொண்ட ஈரானிய மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள். அங்கு தற்பொழுது நிலவும் சமூக, பொருளாதார, கலாச்சார சர்ச்சைகள் பற்றி நாம் அலட்டிகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
புலம்பெயர் செயற்பாடு
அடுத்து சர்வதேச செயற்பாடு. புலம் பெயர் தேசங்களில் ஏறக்குறைய ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழீழ மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு கணிசமானவர்கள், நாட்டில் உள்ள தமது உடன்பிறவா சகோதர சகோதரிகள் பெரியோர் சிறியோர் பற்றி சிந்திக்கிறார்கள், செயற்படுகிறார்கள்.
இதிலும் ஒரு பகுதியினர் தமது சுயநலத்திற்காக, 2009ஆம் மே மாதத்தின் பின்னர் தாம் செய்பவை தான் சர்வதேச செயற்பாடு என கூறி குளிர்காய்கிறார்கள். இவர்களது பின்ணனியை யாரும் அறிய மாட்டார்கள்.
புலம் பெயர் வாழ் செயற்பாட்டாளர்கள், இலங்கைதீவின் விடயங்களில் அக்கறை கொண்டுள்ள உலகின் வலிமை பொருந்திய நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளை சரியான முறையில் அணுக வேண்டும்.
காரணம், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையாக இருந்தாலென்ன, பொதுச் சபை, பாதுகாப்பு சபையாக இருந்தாலென்ன, இலங்கைதீவின் விவகாரங்களில் உலக நாடுகள் யாவும் இந்த நாடுகளின் அபிப்பிராயங்களேயே பின்பற்றுகிறது, தொடர்ந்தும் பின்பற்றும்.
தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வு என்பது அயல்நாடான இந்தியாவின் தயவின்றி ஒருபொழுதும் சாத்தியமடைய போவதில்லை. ஆகையால் இந்தியாவின் தயவை ஈழத்தமிழர் தேடியே ஆக வேண்டும். இவை தவிர்ந்த புலம் பெயர் செயற்பாடுகள் யாவும் விளலுக்கு இறைத்த நீராகவோ முடியும்.
சிறிலங்காவின் மாறுபட்ட அரசுகள், தங்களால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்களை மதிநுட்பம் நிறைந்த ராஜதந்திரிகள், கல்விமான்கள், முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் நியாயப்படுத்தி வரும் இந்த வேளையில், நாம் சர்வதேச ரீதியாக மிகவும் அபத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது, குறிப்பிட்ட நம் சார்ந்த ஒரு சில இணைய தளங்களிற்கும், முகநூல்களிற்கும் விளம்பர செய்தியாக இருந்து வருகிறதே தவிர, அந்த செயற்பாடுகளினால், மிகவும் மோசமாக பாதிக்கபட்டுள்ள எமது மக்களிற்கு எமது தாயகத்திற்கும் எந்தவித நன்மையையும் இதுவரையும் செய்ததும் இல்லை, எதிர்காலங்களில் ஏற்பட போவதும் இல்லை.
தற்பொழுது பலம் பொருந்திய அமெரிக்காவின் காலில் வீழ்ந்து கெஞ்சிய சிறிலங்காவின் ஆட்சியாளர்களிற்கு, அமெரிக்காவின் கருணையினால் நாம் யாரும் விரும்பினோமோ இல்லையோ, மேலும் இரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது வேதனை தரும் விடயம்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஓர் துளியாக காணப்படும் தமிழீழ மக்கள், ஐ.நாவையும், அமெரிக்காவையும் திட்டி குறைகூறுவதை தவிர்த்து, எப்படி ஆக்க பூர்வமான முறையில் எதிர்கொள்ள முடியும் என்பது பற்றி சிந்திப்பதே சரியான இராஜதந்திரம்.
சிறிலங்கா ஆட்சியாளர்களினால் அமெரிக்காவின் காலில் விழுந்து கெஞ்ச முடியுமானால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு யாருடைய தயவோ, பலமோ இன்றி வாழும் நாம் எதற்காக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் எமது இனத்தை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுவதற்காக அணுக முடியாதுள்ளது? கடந்த எட்டு வருடங்களில் இவ்வழியில் நாம் அணுகியது கிடையாது.
ஆகையால் எமது இனத்தை அழிவு பாதையிலிருந்து காப்பாற்றி, தமிழீழ மக்கள் அரசியல் அபிலாசைகளுடன் வாழ வேண்டுமென விரும்பும் ஒவ்வொரு தமிழனும் இவற்றை செய்ய முன்வர வேண்டும்.
இது தவிர்ந்த புலம்பெயர் தேசத்து செயற்பாடுகளால், கடந்த எட்டு வருடங்களாக எமது மக்கள் மேலும் அழிவு பாதையில் இட்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. எமது தற்போதைய புலம் பெயர் செயற்பாடுகளை கண்டு, சிங்கள ஆட்சியாளர்கள் தமது மனதிற்குள் பெரும் பூரிப்பு அடைகின்றனர்.
சர்வதேச நீதி பொறிமுறை
எமது சர்வதேச செயற்பாட்டில் நாம் முதலாவதாக மனதில் கொள்ள வேண்டிய விடயம், சர்வதேச நீதி பொறிமுறை (International/Universal Jurisdiction). முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபக்ச, 2010ஆம் ஆண்டு பிரித்தானியவிற்கு விஜயம் செய்த வேளையில், பிரித்தானிய வாழ் தமிழர்கள் இந்த விடயமாக இரவு பகலாக செயற்பாட்டார்கள்.
அவ்வேளையிலேயே ஜனதிபதி ராஜபக்சவுடன் வருகை தந்திருந்த இராணுவ அதிகாரி ஒருவர் சதுர்தியமாக தப்பியிருந்தார் என ஊடகங்கள் கூறின. இதனை தொடர்ந்து சிறிலங்காவின் போர்குற்றவாளியென கருதப்படும் யாரும் பிரித்தானிய மண்ணில் கால் அடி எடுத்து வைப்பதில்லை.
இறுதியாக வெளிவந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில், சர்வதேச நீதி பொறிமுறை பற்றி 71ஆவது பந்தியின் B பிரிவில் மிகவும் ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளதை புலம் பெயர் தமிழ் அமைப்புகள் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரியவில்லை.
உதாரணத்திற்கு, கடந்த ஐ.நா மனித உரிமை சபை அமர்வில், இரு போர் குற்றவாளிகள் துணிந்து மனித உரிமை சபைக்கு வருகை தந்துள்ளதும், சிலர் போர்குற்றவாளிகள் இன்றும் சுவிஸ் நாடு உட்பட வேறு சில மேற்கு நாடுகளில் வாழ்வதையும், அந்த நாடுகளில் அரசியல் மனித உரிமை செய்வதாக மார்பு தட்டும் யாரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு செயலில் இறங்கவில்லை.
இன்றைய நிலையில், போர்குற்றம் புரிந்தவர்கள் அல்லது பங்காளிகள், உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், உலகில் ஏறக்குறைய நூறு நாடுகளில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட கூடிய நிலை காணப்படுகிறது.
இவற்றில் சில நாடுகளின் அரசியல் நிலை அவற்றிற்கு இடம் கொடுக்கவில்லை என்பதையும் அறிவோம். ஆனால் நாம் முயற்சிக்க வேண்டும்.
தமிழீழ மக்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில், சிறிலங்காவின் போர்குற்றவாளிகளை கைது செய்து கண்டிக்ககூடிய நாடுகள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, அவுஸ்திரியா, பெல்ஜீயம், கனடா, டென்மார்க், பிரித்தானியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, தென் ஆபிரிக்கா, ஸ்பானியா, சுவீடன், சுவிஸ்லாந்து போன்றவை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நாடுகளினால், ஐ.நா வில் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சிறிலங்காவின் போர்குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். உதாரணத்திற்கு 1949 ஜெனீவா ஒப்பந்தம், 1984 சித்திரவதை ஒப்பந்தம் போன்றவை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச குற்றவியல் நீதி மன்றம்
சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு (International Criminal Court – ICC) சிறிலங்காவை எடுத்து செல்வது பற்றி சிலர் பெரிதாக கூச்சலிடும் அளவிற்கு அது சிறிய விடயம் அல்ல.
சிறிலங்கா இவ் ஒப்பந்தத்தில் (Rome Statute) கைச்சாத்திடாதா காரணத்தினால், இவ் வழிமுறை முடியாத காரியம் அல்ல.
உதாரணத்திற்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சூடான் நாட்டின் ஜனதிபதி உட்பட ஆறு போர்குற்றவாளிகளிற்கு, இவ் நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு யூன் மாதம் முதல் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
தெற்கில் மக்களிற்கு வீரம் பேசும் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவற்றை அறிந்திருக்கவில்லை போலும்.
தமிழீழ மக்கள் விடயத்தில் இது சாத்வீகப்படக் கூடிய சந்தர்ப்பம் தற்சமயத்தில் மிகவும் அரிதாக காணப்பட்ட போதிலும், தமிழ் செயற்பாட்டாளர்கள் தமது பரப்புரைகளை ஐ.நா பாதுகாப்பு சபை, பொதுச்சபை ஆகியவற்றுடன் அயராது உழைப்பதுடன், இவ்விடயத்தை அங்கு முன்வைக்க கூடிய பலம் பொருந்திய நாடான அமெரிக்கவின் தயவில்லாது இவ் விடயம் ஒருபொழுதும் கைகூடப்போவதில்லை.
ஆகையால், தமிழீழ மக்களிற்கு புதுமைகள் நடைபெற வேண்டும் என எண்ணுபவர்கள் யாவரும், பலம் பொருந்திய அமெரிக்காவை இரவு பகலாக குறைகூறுவதையும் திட்டுவதையும் நிறுத்தி, அவர்கள் ஆதரவை பெறுவதன் மூலமே, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்.
இவ் அடிப்படையை புரியாது செயற்படுபவர்கள், பூகோள அரசியல் பற்றியும், நாடுகளின் ஆக்கறை பற்றியும், தினமும் மற்றவர்களை திட்டுவதும், “யானை தன் கையால் தனக்கு தானே மண் கொட்டுவதற்கு சமானாது”.
சில புலம் பெயர் தேசத்து அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் தமது அறிக்கைகள் உரைகள் மூலம் தமிழீழ மக்களின் விவகாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நகர்த்த முனைவது, அவர்களிற்கான பிரச்சாரமோ தவிர, அச் செயற்பாடுகள் மூலம் ஏதுவும் உருப்படியாக நடைபெற போவதில்லை.
ஐ.நா.மனித உரிமை சபை மூலம் மிக சுலபமாக ஐ.நா பொதுச்சபைக்கு சிறிலங்காவை நகர்த்த முடியுமென நம்புபவர்கள், ஐ.நாவின் அறிக்கைகள் விதிமுறைகளை மிகவும் கவனமாக படித்து, விடயங்களை ஆராய வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவெனில், வடகொரியவின் விடயத்தை ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து, ஐ.நா பொதுச்சபைக்கு கையளித்துள்ளது போல், சிறிலங்காவின் விடயத்தையும் நகர்த்துமாறு சிலர் கூட்டங்களிலும் அறிக்கைகளிலும் கூறுகிறார்கள்.
இப்படியாக அறிக்கை விடுபவர்கள், மனித உரிமை சபையில் வடகொரியவின் விடயம் என்ன அந்தஸ்தில் உள்ளது என்பதையும், வடகொரிய விடயம் ஏற்கனவே ஐ.நா செயலாளர் நாயகம், ஐ.நா பொது சபையின் கண்காணிப்பில் உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
உண்மை என்னவெனில், 2004ஆம் ஆண்டு முதல், ஐ.நா மனித உரிமை சபையினால் வடகொரியாவிற்கென ஓர் நாட்டிற்கான விசேட பிரதிநிதி (Country Rapporteur) நியமிக்கப்பட்டள்ளார்.
ஐ.நா பிரதிநிதி ஒருவர், ஓர் நாட்டின் விவகாரத்தில் ஆகக்கூடியது ஐந்து வருடம் மட்டுமே சேவை செய்ய முடியும் என்ற அடிப்படையில், இன்று மூன்றாவது ஐ.நா மனித உரிமை பிரதிநிதி, வடகொரியவின் விடயங்களை கையாளுகின்றார் என்பதை, மக்களிற்கு அறிக்கை வெளியிடுபவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமை சபைக்கு முன்பு செயற்பட்ட ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் காலம் முதல், சிறிலங்காவிற்கான ஓர் ஐ.நா விசேட பிரதிநிதி (Country Rapporteur) நியமிக்கப்பட வேண்டும் என்பதை, பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் அன்றிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நவீன மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதனது அருமை தெரியாது செயற்படுவது, மிகவும் கவலைக்குரிய விடயம். ஐ.நா மனித உரிமை சபையை பொறுத்த வரையில், சிறிலங்கா விடயத்தில் அவர்களால் முன்னெடுக்க கூடிய அடுத்த நடவடிக்கை, சிறிலங்காவிற்கான ஐ.நா விசேட பிரதிநிதி (Country Rapporteur) நியமிக்கப்படுவதாகவே அமையும்.
இதன் காரணமாகவே, பணம் படைத்த குபேர தமிழ் அமைப்புக்கள் ஐ.நா பாதுகாப்பு சபை பொதுச் சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
இச் செயற்பாடுகளை புலம்பெயர் தேசத்து அமைப்புக்கள் செய்ய தவறும் கட்டத்தில், வடகொரியவிற்கு ஏற்பட்டது போன்ற நிலை சிறிலங்காவிற்கு ஏற்படுத்த முடியாது.
இவற்றை தவிர்த்து, வருடத்தில் மூன்று தடவைகள் ஜெனீவாவில் கூடும் மனித உரிமை சபையில் பிரசன்னமாகி, வட்ட மேசை மாநாடுகளை நடத்தி, எமது சார்பான ஊடகங்களிற்கு எமது உள்ள கேடுகளை பகிர்வது, பாதிக்கப்பட்ட மக்களிற்கு பரிகாரம் காணும் செயற்திட்டமல்ல.
மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற முறையில், மக்களின் நிதியில் செயற்திட்டங்களை மேற்கொள்வோர் விடயங்களை நகர்த்தவில்லை என்பதே உண்மை.
தமிழீழ மக்கள் மீதான தற்போதைய சர்வதேச பார்வையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவின் போர்குற்றங்களை எடுத்து செல்வது என்பது, “மந்திரத்தால் மாங்காய் விழுத்துவதற்கு சமானாது.” கூறப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் புலம்பெயர் தேசத்து செயற்பாடுகள் மாற்றப்பட வேண்டும்.
-tamilwin.com
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு 01 May 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.V Kirubaharan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.