சும்மா இருங்க…இல்லைனா அவ்வளவுதான்…சீனாவுக்கு வார்னிங் கொடுத்த வடகொரியா

north-korea68சியோல்: வடகொரியா தனது நட்பு நாடான சீனாவை கடுமையான விளைவுகளை சந்தீப்பீர்கள் என எச்சரித்து உள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் 5 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்து, உலக நாடுகளையே அலற வைத்துள்ள வடகொரியா அடுத்து 6 வது முறையாகவும் அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமின்றி, ஐ.நா.வின் சட்டதிட்டங்களை மீறி அந்த நாடு தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பேலிஸ்டிக்’ ரக ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

அமெரிக்கா, அணு ஆயுத சோதனையை நிறுத்திக்கொள்ளாமல் இனியும் தொடர்ந்தால், வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் நிலை உருவாகும் என அடிக்கடி எச்சரித்து வருகிறது.

அதே நேரத்தில், கொரிய தீபகற்ப பகுதியை நோக்கி தனது காரல் வின்சன் விமானம்தாங்கி போர்க்கப்பல் அணியை அமெரிக்கா அனுப்பியும் வைத்துள்ளது. இதன்காரணமாக அந்த பிராந்தியத்தில் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க முயற்சி செய்தது. வடகொரியா அணு ஆயுத சோதனையை முடித்துக் கொள்ள வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்தது.

இது வடகொரியாவை கொந்தளிக்க வைத்துள்ளது. “வடகொரியாவின் பொறுமையை சோதிக்க சீனா முயற்சி செய்யக் கூடாது. சீனா தன்னுடைய பொறுப்பற்ற செயலின் காரணமாக வடகொரியா – சீனா இடையிலான உறவு தூணின் அடிப்பகுதியில் சேதம் ஏற்படுத்தினால், சீனாவானது பெரும் விளைவுகளை சந்திக்கும் என்பதை யோசித்து இருக்கும்,” என வடகொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.இது மேலும் கொரிய கடல் பகுதியில் பதற்றத்தைக் கூட்டியுள்ளது.

tamil.oneindia.com