ஒல்லியான மொடல்களுக்கு பிரான்ஸ் அதிரடி தடை: காரணம் இதுதான்

அழகுப் போட்டிகளில் உடல் மெலிந்த மொடல்களை ஈடுபடுத்த தடைவிதிக்கும் சட்டம் சனிக்கிழமை முதல் பிரான்ஸில் அமலாகியுள்ளது.

அழகி போட்டியில் பங்கேற்கும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற எடையினை குறிக்கும் பி.எம்.ஐ. மற்றும் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியம் குறித்த மருத்துவர் கையெழுத்திட்ட சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

உணவு கோளாறுகளை எதிர்த்து போராடுவதே இதன் நோக்கம் என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

டிஜிட்டல் ரீதியாக திருத்தப்பட்ட புகைப்படங்களிலும் அக்டோபர் 1ம் திகதி முதல் அதற்கான குறியீடு இடம்பெற வேண்டும்.

அதாவது ஒரு மொடலின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அந்த புகைப்படத்தில் திருத்தப்பட்ட புகைப்படம் என இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த சட்டம் திருத்தப்படுவதற்கு முன்பாக மொடல்களுக்கான குறைந்தபட்ச பி.எம்.ஐ. குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் மொடல் ஏஜென்ஸிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சட்டத்தின் இறுதி வடிவம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றிருந்த நிலையில் மொடலின் எடை, வயது மற்றும் உடல் வடிவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒல்லியாக இருக்கிறாரா இல்லையா என மருத்துவர்கள் முடிவெடுக்க வேண்டும் என இச்சட்டம் அனுமதிக்கிறது.

சட்டத்தினை மீறுபவர்களுக்கு சுமார் 82,000 டொலர் வரை அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.

எடை குறைந்த மொடல்கள் தொடர்பான சட்டத்தை இயற்றியதில் பிரான்ஸ் முதல் நாடல்ல. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் ஏற்கனவே சட்டத்தை இயற்றியுள்ளன.

-lankasri.com