அமெரிக்கர்கள் மீது வெடிகுண்டு வீசவோ பழி தீர்க்கவோ அப்படியான எந்த எண்ணமும் தமக்கு இல்லை என வட கொரிய ஜனாதிபதி கிம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் கூடைப்பந்து வீரரான Dennis Rodman மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடனான சந்திப்புக்கு பின்னர் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களின் தவறான கண்ணோட்டம் காரணமாகவே ஜனாதிபதி கிம் கொடுமையாளராக உலக மக்களின் பார்வையில் தெரிகிறார் என வாதிடும் டென்னிஸ், இதுவரை ஆறு முறை கிம் ஜோங் உன் அழைப்பின் பேரில் வட கொரியா சென்று வந்துள்ளார்.
அமெரிக்கா மீது அதிக பற்று கொண்ட கிம் ஒருக்காலும் போர் தொடுக்கும் நிலைக்கு தள்ளமாட்டார் என கூறும் டென்னிஸ், அமெரிக்கா மட்டுமல்ல உலகின் எந்த நாட்டின் மீதும் வட கொரியா போர் தொடுக்கும் மனநிலையில் இல்லை எனவும் டென்னிஸ் தெரிவித்துள்ளார்.
போர் சூழல் உருவாகியுள்ள நிலையில் ஏன் இந்த ஆயுத குவியல் என கேள்வி எழுப்பிய டென்னிஸ், அதற்கு பதிலாக, அமெரிக்க அரசு எப்போதும் எளியவர்கள் மீது சவாரி செய்யவே விரும்பும் எனவும், அந்த நிலை வடகொரியாவுக்கு வர வேண்டாம் என்பதாலையே ஆயுதங்களை குவித்து வருவதாக கிம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த 2013 முதன் முறையாக வடகொரியா சென்று வந்ததன் பின்னர் இதுவரை 6 முறை அங்கு சென்று வந்ததாக கூறும் டென்னிஸ், இத்தனை ஆண்டுகளில் வடகொரியா உலகமே மெச்சும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், அங்குள்ள 25 மில்லியன் மக்களுக்காகவும் கிம் உழைப்பதாக டென்னிஸ் தெரிவித்துள்ளார்,
ஒபாமாவுடன் சந்திப்புக்கு மிகவும் விரும்பியதாகவும், அமெரிக்க வர்த்தகர்களை சிறிதளவேனும் அனுமதிக்க்க தாம் தயாராக இருந்ததாகவும் கிம் டென்னிசிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அரசியல் சூழல் காரணமாக ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலகட்டத்தில் அது நிறைவேறாமல் போனதாக கிம் வருத்தம் தெரிவித்ததையும் டென்னிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
-lankasri.com