வடக்கு முதலமைச்சர் ஒருபோதும் பிரிந்து சென்று செயற்பட எண்ணியதில்லை! சிறீதரன் எம்.பி

viknswaranவடக்கு முதலமைச்சர் ஒருபோதும் பிரிந்து சென்று செயற்பட எண்ணியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் நேர்மையானவர். அவர் சத்தியம் தவறாதவர். இறை நம்பிக்கை கொண்டவர். நான் அவர் மீது அதீதமான நம்பிக்கை வைத்துள்ளேன். அதற்காக நான் பல விமர்சனங்களை எங்கள் கட்சி சார்ந்து தற்போதும் பெற்றுக் கொண்டிருப்பவன். அவர் சம்பந்தன் ஐயாவுக்கு எதிராகவோ அல்லது எங்கள் இனத்திற்கு எதிராக செயற்படும் ஒருவரல்ல. அவர் தற்போதும் சம்பந்தன் ஐயாவின் தலைமையின் கீழ் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் பிரிந்து சென்று செயற்பட எண்ணியதில்லை எனத் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தொலைக்காட்சி சேவை ஒன்றுடன் நேற்றிரவு இடம்பெற்ற உரையாடல் நிகழ்வில் அவர் கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் நேர்மையானவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் மிகவும் உயர்ந்த மனிதர். அவர் அந்த வழியில் தன்னுடைய பணியைத் தொடர்ந்தும் நேர்மையாகச் செயற்படுத்துவார்.

வடக்கு மாகாண சபை தொடர்பில் தவறுகள் ஏதும் சொல்வதற்கு என்னிடமில்லை. ஆனால் வடக்கு மாகாண சபையிலுள்ள சில கருத்து வேறுபாடுகள், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களிடையேயுள்ள கருத்து மோதல்கள், வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையேயுள்ள தேவைகள் முரண்பாட்டுத் தோற்றங்களை வெளிப்படுத்துகின்றன. அந்த முரண்பாட்டுத் தோற்றங்கள் நாங்கள் பேசித் தீர்க்க வேண்டிய அல்லது ஒற்றுமைத் தன்மையுடன் செயற்பட வேண்டிய பல தேவைகள் காணப்படுகின்ற போதிலும் கூட சிறிய சிறிய குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஆனால், தமிழர்கள் ஒரு ஆட்சி முறைக்குட்பட்டு நீண்ட காலம் காணப்படவில்லை. வடமாகாண சபை தான் தமிழ் மக்களுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டுள்ள ஆட்சி முறை. அவ்வாறான ஆட்சி முறையில் பல அனுபவங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய காலமாக இந்த ஆட்சி முறை காணப்படுகின்றது. இந்த ஆட்சி முறையிலும் தவறுகள் காணப்படுகின்றன.

தவறுகளை நாங்கள் இந்த விடத்தில் சுட்டிக் காட்டி நாங்களே கொண்டு வந்த மாகாண சபை, நாங்களே கொண்டு வந்த உறுப்பினர்களை விமர்சிப்பது முறையல்ல. நாங்கள் தவறுகளை உரியவர்களுடன் கலந்துரையாடி அதற்கான சரியான தீர்வைக் காண முனைய வேண்டும் என்றார்.

-tamilwin.com

TAGS: