புலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்?

lttelogoஆட்சிக் கவிழ்ப்பு கதைகளோடு சேர்த்து தற்போது அதிகமாக வெளிவரும் செய்திகள் விடுதலைப்புலிகள் தொடர்புபட்டவையே.

இலங்கை இறுதியுத்தத்தின் போது தப்பிச் சென்ற முக்கியத் தலைவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தற்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருவதாக சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அதாவது இறந்து போனதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டு வருவதோடு புலிகள் மீதான அச்சத்தையும் மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் மேலும் பல விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பற்றி அண்மைக் காலமாக அதிகமான செய்திகள் வெளிவருகின்றன.

2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்தின் பின்னர் புலிகளுடனான போர் முற்றுபெற்று விட்டது, புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என்றே அப்போதைய அரசு தலைவர்களும் போரை முன்னின்று நடத்தியவர்களும் தெரிவித்தனர்.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு அதாவது ஆட்சி கைமாறும் வரை விடுதலைப்புலிகள் இருப்பதாகவே அல்லது விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இருப்பதாகவோ அதிகமாக கூறப்படவில்லை.

எனினும் ஆட்சி மாற்றம் இடம் பெற்றதன் பின்னரான காலகட்டம் முதல் விடுதலைப்புலிகள் தொடர்பில் அதிகமான செய்திகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் மீண்டும் விடுதலைப்புலிகள் என்பதே பிரதானமாகின்றது.

குறிப்பாக கடந்த கால ஆட்சியின் போது விடுதலைப்புலிகள் குறித்து பேசுவதும் மிகப்பெரிய குற்றம் என்ற நிலையே இருந்தது. எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நிலை தலைகீழாக மாறியது.

கடந்த காலத்தில் புலிகள் குறித்து சட்டங்களை இயற்றியவர்களே ஆட்சி மாறிய பின்னர் விடுதலைப்புலிகள் மீதான பீதியை மக்கள் மத்தியில் விதைக்க தொடங்கினர்.

அதேபோல் அப்போது விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டதாக பகிரங்கமாக கூறியவர்கள் இன்று சந்தேகத்தையும், மாற்றுக்கருத்துகளையும் தெரிவித்து வருகின்றமை வேடிக்கைக்குரியதே.

அதற்கு பிரதான காரணம் விடுதலைப்புலிகள் இன்றும் இருக்கின்றார்கள், அவர்கள் மூலம் நாட்டுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற பதற்றத்தை நாட்டு மக்களின் மனதில் திணிக்கப்படுதல் வேண்டும்.

இதனால் மக்கள் ஏனைய அனைத்தையும் மறந்து விட்டு விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறைவு செய்தவர் பக்கம் செல்லும் நிலையும் ஏற்படுவதோடு அவருக்காக ஆதரவு தெரிவிக்கவும் தொடங்கி விடுவர்.

இதன் காரணமாக கிடைக்கும் பரிசு, இழந்த அதிகாரமும், பதவியும் மீண்டும் பெற்றுக்கொள்ளக் கூடிய சாதகமான சூழ்நிலைகளே என்பது வெளிப்படையாக தெரியும் ஒன்று.

இதில், நல்லாட்சி அரசு கடந்த கால மகிந்தவின் ஆட்சி மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் கூட, மக்கள் அதனை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளாமல் மகிந்த தரப்பிற்கு ஆதரவு தெரிவித்து வர மிக முக்கிய காரணம் யுத்த வெற்றியே.

இதனை நன்கு அறிந்து கொண்ட காரணத்தில் மீண்டும் மக்களின் செல்வாக்கை பெற்றுக் கொள்ள விடுதலைப்புலிகளை மகிந்த தரப்பும் ஆட்சிக்கு எதிரான சக்திகளும் பயன்படுத்த தொடங்கி விட்டன என்றே கூறப்படுகின்றது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டு காலமாக விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறப்பட்டு வந்த செய்திகள், இன்று அவர்கள் இலங்கைக்கு வந்து விட்டுச் செல்கின்றார்கள் என நிலைக்கு மாறிவிட்டன.

இவை மீண்டும் விடுதலைப்புலிகள், மீண்டும் போர் என்ற பீதியை மக்கள் மத்தியில் வலுப்படுத்திக் கொண்டு வரும் செயல் என்பது தெளிவாகின்றதாக கூறப்படுகின்றது.

அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கும் குழுமத்தினாலேயே இவ்வாறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனினும் இதன் மூலம் ஆட்சி மாற்றம் என்பதைத் தாண்டியும், ஒட்டு மொத்த நாட்டிற்கும் பாதகமான விளைவினையே இந்த புலிகள் தொடர்பில் வெளிவரும் கருத்துக்கள் ஏற்படுத்தக்கூடும் என சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்ல நல்லிணக்கம் மிக்க நாடாக இலங்கை மலர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த நாட்டு மக்களினதும் எதிர்ப்பார்ப்பு. அதற்கான சாத்தியக் கூறுகளும் தற்போது ஏற்பட்டு வருகின்றது.

ஆரம்பகாலம் முதல் இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாவிட்டாலும் கூட, எதிர்காலத்தில் தீர்வு கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையோடு நகர்கின்றது இலங்கை.

இந்த நிலையில் மீண்டும் விடுதலைப் புலிகள் என்ற கருத்தை அரசியல்வாதிகள் வெளிப்படுத்தும் போது அதன் காரணமாக ஒரு வித பதற்ற நிலை நாட்டில் ஏற்படக்கூடும்.

அதாவது ஆரம்ப காலத்தில் தமிழர்களை விடுதலைப்புலிகளாகவும், எதிரிகளாகவும் பார்த்ததால் இனக்கலவரங்கள் ஏற்பட்டதனைப் போன்றதோர் நிலை மீண்டும் உருவாகும் சாத்தியக் கூறு அதிகம்.

இந்தக் கருத்தையே அண்மையில் நல்லாட்சி தரப்பு அரசியல் வாதிகள் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் ஆட்சி மாற்றம், அதிகார மோகம் காரணமாக சுயநலங்களுக்காக வெளியிடப்படும் கருத்துகள் நாட்டில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்திவிடும் அபாயமே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள விடுதலைப்புலிகள் என்ற ஆயுதத்தை மக்கள் மத்தியில் சாதூர்யமாக பிரயோகிக்கப்பட்டு வருகின்றது என்பதே சமூகவியலாளர்களின் கருத்து.

அதன் படி உண்மைத் தன்மை ஆராயாமல் மீண்டும் விடுதலைப்புலிகள் வந்து விட்டார்கள், என்ற மாயத் தோற்றத்தை ஆட்சிக் கவிழ்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மகிந்த அணியினர் பரப்பி வருவதாகவே கூறப்படுகின்றது.

என்றாலும் இந்த இக்கட்டான நிலை நாட்டில் மறைமுகமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றமையை நன்றாக அறிந்தும் கூட இப்போதைய அரசு தரப்பு அமைதியை காத்துக் கொண்டு வருவதிலும் கூட அரசியல் இலாபங்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

-tamilwin.com

TAGS: