கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் சம்பந்தன்! கட்டுநாயக்காவில் மோடி சொன்னது

sam_modiஉங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்வதேச வெசாக் தின விழாவில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய இராப்போசன விருந்திலும் கலந்து கொண்டார். தொடர்ந்து நள்ளிரவு வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மோடியைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இதேவேளை, இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியா செல்வதற்கு முன்னார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சந்தித்து பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது இலங்கை அரசியல் பிரச்சினைகள், தமிழ் மக்கள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, சம்பந்தனிடம் கருத்து வெளியிட்ட மோடி, உங்கள் உடல் நலத்தினைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இன்று தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளீர்கள். உங்களது பொறுமையான இந்த அணுகுமுறையை நாங்கள் வெகுவாக மெச்சுகின்றோம்; வரவேற்கின்றோம்.

இதேவேளை, இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களின் இந்தியா அக்கறையோடு இருக்கும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தாங்கள் அவதானித்து வருவதாகவும் மோடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: