வடகிழக்கின் இனப்படுகொலை நாளாக மே 18 ஐ பிரகடணப்படுத்த வேண்டும்!

may18வடகிழக்கு தாயக பூமியின் இனப்படுகொலை நாளாக மே 18ம் திகதியை பிரகடணப்படுத்தி அன்றைய தினம் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான துக்க தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டுமென சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அதில் மேலும் கூறியுள்ளதாவது,

சுமார் 60 ஆண்டுகலாக இலங்கையின் வடகிழக்கு தாயக பூமியில் தமக்கான சுயநிர்ணய உரிமை போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழினம் காலத்துக்கு காலம் பல இனப்படுகொலைகளை சந்தித்துள்ளது.

வடகிழக்கு பூமியில் நடைபெற்ற பல நூற்றுக்கணக்கான படுகொலை சம்பவங்களில் பல இலட்சம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் உட்பட பல குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலை சம்பவங்கள் மிகவும் உக்கிரமடைந்த 2009ம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வகைதொகையின்றி இலட்சக்கணக்காண தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தி தமிழர்களை இந்த பிராந்தியத்தின் அடிமைகளாக்கி முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய 2009 ம் ஆண்டின் கொடுங்கோலாட்சியை நினைவுபடுத்தி படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு நீதியை கோரி வருகின்ற மே மாதம் 18ம் திகதியை வடகிழக்கின் தேசிய துக்க தினமாக பிரகடணப்படுத்த வேண்டும்.

குறித்த தினத்தை வருடாவருடம் வடகிழக்கின் இனப்படுகொலை நாளாக அனுஸ்டிப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும்.

அன்றைய தினம் மலை 6 மணிக்கு வடகிழக்கு பகுதியில் இனப்படுகொலைகள் நடைபெற்ற இடங்களில் ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில்சமூக அமைப்புக்கள் என அனைவரும் ஒன்று கூடி விளக்கேற்றி படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு இத்தால் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறித்த வேண்டுகோளை ஏற்று வடகிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உறுப்பினர்கள் இணைந்து பிரேரணை ஒன்றை கொண்டுவந்து குறித்த நாளை வடகிழக்கின் தேசிய துக்கதினமாக அறிவிக்க வேண்டும் எனவும் அதனை வடகிழக்கில் உள்ள அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டுமென வேண்கோள் விடுக்கின்றோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-tamilwin.com

TAGS: