சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பட்டிருப்பில் இருந்தும் சித்தாண்டியில் இருந்தும் இரு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலகங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றதுடன், இதன்போது அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
சுவாமி விபுலானந்தர் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் பல விடயங்களை அறியாதவர்களாக உள்ளனர்.
உலகம் போற்றும் மேதையே நாங்கள் கொண்டிருந்த போதிலும் அவர் தொடர்பில் முழுமையாக தெரியாதவர்களாக எமது எதிர்கால சந்ததியினர் இருந்து வருகின்றனர்.
அதன் காரணமாக சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன தினத்தை விசேட தினமாக கொண்டு சுவாமி தொடர்பில் இளம் சமூகம் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுவாமியின் 125ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் போட்டிகளும் பல்வேறு மட்டத்தில் நடைபெற்றுவருகின்றன. இதன் இறுதி நிகழ்வுகள் விமர்சையான முறையில் நடைபெறவுள்ளது.
அதன்முன்னோடியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6.30மணிக்கு பட்டிருப்பு பாலம் மற்றும் சித்தாண்டி சந்தியில் இருந்து இரண்டு ஊர்வலங்கள் ஆரம்பமாகும்.
ஊர்திகள் சகிதம் இந்த ஊர்வலங்கள் ஆரம்பமாகவுள்ளதுடன், ஊர்வலமானது கல்லடியில் உள்ள சுவாமியின் சமாதியினை வந்தடையவுள்ளது.
பட்டிருப்பில் ஆரம்பமாகும் ஊர்வலம் களுவாஞ்சிகுடி ஊடாக களுதாவளை, தேற்றாத்தீவு, கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா ஊடாக கல்லடியை வந்தடையும்.
அதேபோன்று சித்தாண்டி முருகன் ஆலய சந்தியில் இருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் வந்தாறுமூலை, கொம்மாதுறை, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை ஊடாக கல்லடியை வந்தடையும்.
அதனைத்தொடர்ந்து கல்லடி உப்போடையில் உள்ள மணிமண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெறும் அன்றைய தினம் குறித்த ஊர்வலம் வரும் பகுதிகளில் உள்ள மக்கள் வீதிகளை துப்புரவுசெய்து தோரணங்களை கட்டி நிறைகுடங்களை வைத்து வரவேற்கும் பணிகளைசெய்து உதவுமாறும் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-tamilwin.com