இலங்கை – இந்திய பிரச்சினைக்கு புதிய முறையில் தீர்வினை தேட முயற்சி

SriLanka Mapஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை தடுப்பதற்காக இந்தியா நீண்ட ‘டோனா’ தொழில்நுட்ப படகுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்து வந்த மீனவர் பிரச்சினைக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2000 படகுகளுடனான இந்த தொழில்நுட்பத்திற்காக 16,210 மில்லியன் இந்திய ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன.

மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்த டோனா தொழில்நுட்ப படகுகள் மூலம் இலங்கையின் கடல் எல்லைக்கு இந்திய மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு அது எச்சரிக்கையாக உணர்த்தப்படும்.

இதன்மூலம் இந்திய மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்வதற்கும் அது வழிவகுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

இந்த திட்டத்தின்படி 2017- 2018 ஆம் ஆண்டு முதல் கட்டத்துக்காக 500 டோனா தொழில்நுட்ப படகுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்குரிய செலவான 4050 மில்லியன் ரூபாய்களை இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் பகிர்ந்து கொள்ளவுள்ளன.

2018 – 2019ஆம் ஆண்டின் இரண்டாம் கட்டத்தில் 500 டோனா தொழில்நுட்ப படகுகள் வழங்கப்படவுள்ளதுடன் மூன்றாம் கட்டத்தில் 1000 படகுகள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடவுள்ள மீனவக்குடும்பங்களுக்கு தமிழக அரசாங்கம் ஊக்குவிப்பு நிதிகளை வழங்கவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு இலங்கையின் மீனவர்களுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும் என்று இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால் வருடம் ஒன்றுக்கு 9பில்லியன் ரூபாய்களை சேமிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: