நாட்டின் பல பிரதேசங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகளவான மழைவீழ்ச்சி மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய வங்களா விரிகுடா கடல் பிரதேசங்களின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக சுறாவளியாக மாறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வான்பரப்பில் காணப்படும் கருமேகங்கள் காரணமாக மழை மற்றும் காற்றுடனான நிலைமையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டை சுற்றிய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களை சேர்ந்த 464477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியிட்ட புதிய அறிக்கையின்படி இதுவரை 164 பேர் உயிரிழந்ததுடன் 88 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். 104 பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை பெய்தால் மண் சரிவு ஏற்படும் பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை கொழும்பு, நுவரெலியா உட்பட நாட்டின் பல பாகங்களில் அடைமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
-tamilwin.com