தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் மீண்டும் சயனைட் குப்பிகளை தொங்கவிட விரும்புகிறார்களா?

625.147.560.350.160.300.053.800.264.160.90(21)விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றார்கள் என்பதற்குக் கிளிநொச்சித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கிளிநொச்சி, பளையில் பொலிஸ் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைச் சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ள முடியாது. மே 18ஆம் திகதிக்கு அடுத்த நாள் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் அது ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. மீண்டும் விடுதலைப்புலிகள் உயிர் பெற்று வருகின்றனர் என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.

எமது ஆட்சியில் இவ்வாறு இடம்பெறுவதற்கு நாம் அனுமதிக்கவில்லை. சிவாஜிலிங்கம் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால், இந்த ஆட்சியில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் பொலிஸார் ஆகியோர் முன்னிலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரிவினைவாதத்தை ஆதரித்துப் பேசுகின்றனர். அரச அனுசரணையுடன்தான் இவையெல்லாம் நடக்கின்றன.

மீண்டும் விடுதலைப்புலிகள் உயிர்பெற்றுவருவதற்கு நாம் இடங்கொடுக்கலாமா? தமது பிள்ளைகள் புத்தகங்களை வைத்துவிட்டுக் கழுத்தில் மீண்டும் சயனைட் குப்பிகளைத் தொங்கவிடுவதற்குத் தமிழ்த் தாய்மார்கள் விரும்புகிறீர்களா?அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், இந்த அரசு அவர்களின் விருப்பத்துக்கு எதிராக – புலிகளின் விருப்பத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது.

தெற்கில் ஒரு சட்டமும் வடக்கில் ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாம் தெரியாமல் ஆர்ப்பாட்டம் செய்தால்கூட நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகின்றோம். ஆனால், வடக்கில் நாட்டுக்கு விரோதமான – நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது பொலிஸார் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.

சரத் பொன்சேகாகூட அவரது அமைச்சுப் பதவியைக் காப்பாற்றுவதற்காக வீரனாக இருந்து துரோகியாக மாறிவிட்டார். கிளிநொச்சி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தெற்கில் நடக்கும் சாதாரண சம்பவத்துடன் ஒப்பிட்டுக் கருத்துக் கூறியுள்ளார். இவர்கள் சேர்ந்து இந்த நாட்டுக்கே துரோகம் செய்கின்றனர்” என்றார்.

-tamilwin.com

TAGS: