உலகில் எந்த இடத்திலும் தோற்பவர் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. அதேபோல் வரலாறுகள் இயற்றப்படுவதும் எழுதப்படுவதும் வெற்றி பெற்றவர்கள் மூலமாகவே.
எங்கும் எவராலும் தோற்றவர்கள் மூலமாக வரலாறுகள் எழுதப்படவில்லை. அதற்கு காரணம் வென்றவர்கள் நல்லவர்களாக இருக்கட்டும், அல்லது தீயவர்களாக இருக்கட்டும்.,
உலகம் ஏற்றுக்கொள்வது அவர்கள் சொல்வதையே. தோற்பவர் பேச்சு சபை மட்டுமல்ல நடு வீதியில் கூட எடுபடாது என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.
அதேபோன்று உலகில் நடந்த, நடைபெறும் இன அழிப்புகள், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை சார்ந்த குற்றங்கள் அனைத்தையுமே விசாரிப்பது வென்றவர்களே.
அதிலும் கூட நீதி, நியாயம் போன்றவையும் கூட வென்றவரிடம் தஞ்சமடைவது போன்று தோற்றவனிடம் வந்து சேர்வது இல்லை. இந்த இடத்தில் ஒன்றைக் கூறலாம்.,
தண்டிக்கப்படுபவர்கள் தோற்றவர்கள், அந்த தண்டிப்பை வழங்குபவர்களும் விசாரிப்பதும் கூட வென்றவர்களே என்பதனை எத்தனையோ கதைகள் மூலமாக அவதானித்துள்ளோம்.
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர், உரிமைமீறல்கள், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து நீதி வழங்க சர்வதேச நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தோற்றவர்களுக்கு எதிராகவே அவை செயற்பட்டு வருகின்றது என்றும் கூறலாம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சரியான நீதிக்காக மட்டும் செயற்பட்டு வருகின்றதா? கம்போடியா, டாஸ்மோனியா, ஆபிரிக்கா, ருவாண்டா, லியோன், உட்பட பல நாடுகளில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சிறப்பு நீதிமன்றங்கள் நீதி வழங்கியதா?
வழங்கப்பட்டு இருக்கும் ஆனால் அது வென்றவர்களுக்கு சாதகமாகவே அமைந்திருந்தன என்பதே தெளிவு. இதனை சர்வதேச போர்க்குற்ற வழக்குகளில் ஆஜரான Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் புத்தக வடிவிலும் கூறியிருந்தார்.
இனப்படுகொலைகளுக்கு விசாரணை நடத்த வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என ஒட்டு மொத்த தமிழினமும் ஒன்றாய் சேர்ந்து குரல் கொடுத்தாலும் இன்று வரை அவை செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கொலிக்கு நிகரானது மட்டுமே.
இந்த விடயத்தில் உலகில் நடந்த பல்வேறு இனஅழிப்புகளை விசாரிக்க விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அதனை உதாரணம் காட்டி இலங்கை பிரச்சினையிலும் தீர்வு கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை கலந்த எதிர்ப்பார்ப்புக் கருத்துகள்.
இதற்காக கம்போடியாவில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி கிடைத்தது. அது போல இலங்கை விடயத்திலும் தீர்ப்பு கிடைக்கும் என அதனையும் சுட்டிக்காட்டுகின்றார்கள் பலர்.
ஆனால் அந்த கம்போடியா விவகாரத்தில், உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த கமர்ரூஜ் இயக்கத்தினர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர்.
சுமார் 15000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலையில் முக்கிய புள்ளிகள் பலர் தப்பிவிட, சித்திரவதை முகாமிற்கு பொறுப்பாக இருந்த ஒருவருக்கு 20 வருட சிறை தண்டனை கிடைத்தது.
என்றபோதும் கமர்ரூஜ் இயக்கத்துடன் தொடர்பு வைத்து இனப்படுகொலைகளுக்கு உதவி செய்த நபர்கள் இன்று கம்போடிய அரசு உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.
அதில் சிலர் எதிரிகளுக்கு காட்டிக் கொடுத்து துரோகங்களைச் செய்தவர்கள் பலரும் இருக்கின்றார்கள் என்பது இப்போதும் பலர் அறிந்ததே. ஆனால் சர்வதேச சமூகமும் அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டது.
துரோகிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் தண்டிப்பு கொடுப்பதற்கு பதில் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. எட்டப்பனை தண்டிக்க கட்டபொம்மனே வரவேண்டும், வேறு ஒருவர் மூலம் தண்டனை வழங்கப்படாது, வழங்கவும் முடியாது என்பதனை இது தெளிவுபடுத்தும்.
கமர்ரூஜில் இருந்து பிரிந்த ஹூன்சென்னுடைய குழுவினர், வியட்நாம் படைகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். அந்த ஆட்சியே இன்றுவரை தொடர்கின்றது.
இங்கு “ஒரு நாள், தாமும் இனப்படுகொலைகள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவோம்” என கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் அச்சமடையும் சாத்தியம் உண்டா??
நிச்சயமாக கிடையாது. காரணம், கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்களே கம்போடிய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு பிரதான துணையாக நின்றுள்ளனர்.
அதாவது, இங்கு தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி, என்ற பெயரிலான அநீதியே நிலைநாட்டப்பட்டது.
அதேபோல் சியாரா லியோன் போர்க்குற்றங்களில், லிபியாவின் ஆதரவு பெற்ற சாங்கோ படையினரே தண்டிக்கப்பட்டனர். காரணம் தோற்றவர்கள் அவர்களே.
சாங்கோ படையினருக்கு உதவி செய்த, லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் பதவியில் அகற்றப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.
ஆனால் அவர் வாக்குமூலம் கொடுக்கும் போது அமெரிக்க தூதரகத்தின் இரகசிய ஆவணங்களை குறிப்பிட்டார். இதன் போது டெய்லர் விடுதலை செய்யப்பட்டால் புதிய போர் உருவெடுக்கும் என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்தது.
இதனால் அவரது வாக்குமூலமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, விசாரணையும் முழுமையடையவில்லை. அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மட்டும் சிறப்பாக வாசிக்கப்பட்டது.
ருவாண்டா இனப்படுகொலைகள் முழு உலகத்தையும் உலுக்கியது. ஐ.நா நினைத்திருந்தால் அந்தப் படுகொலைகளைத் தடுத்து இருக்கலாம். ஆனால் அதனைச் செய்யவில்லை.
ருவாண்டாவில் ஐ.நாவின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டு, அப்படை அதிகரிக்கப்படுவதற்கு பதில் குறைக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது. அதனால் ருவாண்டாவில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
ஐ. நாவின் கோபிஅனன் 2004ஆம் ஆண்டு ருவாண்டா விடயத்தில் வருத்தம் தெரிவித்தார். அது மட்டுமல்லாது ஒரு முக்கிய உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.
அதாவது “உலகில் இனி எங்கு இனப்படுகொலை நடந்தாலும் ஐ. நா அதில் தலையிடும், கண்காணிக்கும் என்பதே அது. ஆனால் 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலைகளின் போது ஐ.நா கண்ணை மூடிக்கொண்டது.
ருவாண்டா விடயத்தில் முறையான நீதி கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இன்று ருவாண்டா அரசில் பதவி வகிக்கும் பலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தபோதும் தண்டிக்கப்படவில்லை.
இவ்வாறு உலகில் சுமார் 30 இற்கும் அதிகமான சிறிய அல்லது, பெரிய யுத்தங்கள் இடம்பெற்றன. அனைத்திலும் தண்டிக்கப்பட்டவர்கள் தோற்றவர்களே.
ஆனால் அதிலும் ஓர் கண்துடைப்பிற்காக தண்டிப்புகள் வழங்கப்பட்டனவே தவிர, உண்மையான குற்றவாளிகள் எவரும் (அனைவரும்) தண்டிக்கப்பட்ட வரலாறுகள் இன்னமும் எழுதப்படவில்லை. இனியும் நடக்குமா என்பது கேள்விக்குறி.
இதனை Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் தான் வெளியிட்ட புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடயத்திலும் இதுவே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தீர்ப்பு வேண்டும், நீதி வேண்டும், தண்டிப்பு வேண்டும் என ஒட்டு மொத்த தமிழர்களும் கேட்டாலும் பதில் கிடைக்காது.
காரணம் அங்கு நீதியை எழுதப்போகின்றவர்கள் வென்றவர்கள். சிறப்பு நீதிமன்றங்கள் எனப்படுவதனை அமைப்பவர்கள் ஆட்சியாளர்கள் அப்படி என்றால் எப்படி நீதி கிடைக்கும்?
எந்த ஓர் இடத்திலும் ஒரு ஆட்சியாளர்களின், அதாவது வென்றவர்களின் அனுமதி இன்றி அல்லது அரசியல் தலையீடுகள் இல்லாமல் நீதிகள் எழுதப்படுவதும் சாத்தியமே இல்லை. அதற்கு அனுமதி கொடுக்கப்படுவதும் இல்லை.
உலகத்தமிழர்கள் ஒன்று திரண்டு கேட்டாலும் நீதி கிடைக்கலாம் என்ற எண்ணம் தப்பில்லை, ஆனால் இதுவும் நடக்கலாம், நடந்தால் நன்று என்று மட்டுமே பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிறிதோர் விடயம், ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி இந்திய உறவுகள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும் எனப்போராடுகின்றவர்களாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.
ஆனால் அதிலும் அதிகமானோர் ஈழத்தமிழர்களின் வலிகளை வைத்து அரசியலும், வியாபாரமும் செய்பவர்களே. ஒரு சில இடங்களில் இலங்கைத் தமிழர்கள் விடயம் வேடிக்கையாய் மாறுவதற்கும் அதே தொப்புள் கொடி உறவுகளே காரணம் என்றும் கூறலாம்.
அதே போல் இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்பது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில இந்திய உறவுகளின் கோரிக்கை. காரணம் போர்க்குற்றம், தமிழர்களை அழித்ததற்கு தண்டிப்பு.
ஆனால் அப்படி செய்தால் அதனால் பாதிக்கப்படுவதும் இப்போது ஒட்டு மொத்த இலங்கையர்களுமே என்பதை ஏன் மறக்கின்றார்கள், அதில் தமிழர்கள் அடங்குவார்கள் என்பதனை அறியமுடியாதவர்களா?
போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் பங்கு உள்ளது. சர்வதேசத்தில் பலம் வாய்ந்த அதிகாரத்தில் உள்ள நாடுகள் பலவற்றிற்கும் தொடர்பு உண்டு என்பது மறுக்கமுடியாது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என தமிழர்கள் எதிர்பார்ப்பதோ, காத்திருப்பதோ எந்த அளவிற்கு அர்த்தமானது என்பது தெரியவில்லை.
இந்த இடத்தில் தமிழர்கள் தோற்று விட்டார்களா என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் தமிழர்களுக்கு நீதி கொடுப்பதற்கு இப்போதைய இலங்கை ஆட்சியாளர்களும் சரி..,
சர்வதேசமும் சரி ஒத்துழைப்பு தராது. அத்தோடு உண்மையாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டிப்பு மட்டும் கிடைக்காது.
இதனை 8 வருடங்களாக மெதுவாக, நகர்ந்து வரும் தமிழர்களின் தீர்வுகளும், போர்க்குற்ற விசாரிப்புகளும் தெளிவாக எடுத்துக்காட்டி விட்டன.
ஆனால் நீதி கிடைக்கும், என தமிழர்கள் ஏமாற்றிக் கொண்டு வருவதும், வெளிநாட்டு விஜயங்களை இலங்கை அரசியல்வாசிகள் மேற்கொள்வதும், வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கை வந்து செல்வதும், ஆலோசனை செய்வதும் வட்ட மேசைகளில் அமர்ந்து வருவதும் மாத்திரம் தொடர்கின்றதே தவிர நீதிக்காக நகர்வு இடம் பெற்றதாக தெரியவில்லை.
அதேபோன்று இலங்கை இன அழிப்பிலும் சரி, உலக யுத்தங்களிலும் சரி, சர்வதேசமும், மனித உரிமை ஆணையகங்களும் அழிப்பு நடந்து முடியும் வரை வேடிக்கை பார்த்தன.
எல்லாம் முடிந்த பின்னர் உடனே வந்து முதலைக்கண்ணீர் வடித்து, நீதி தருவோம் என்று கூறுவது மட்டுமே நடந்து வருகின்றது. இவ்வாறான நிலை தொடரும் போது..,
சர்வதேச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், நிலைமாற்றுக்கால நீதி என்பவை உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை வைப்பது, அவரவர் தனிப்பட்ட விடயம்.
நீதி தேவதை கண்ணைக் கட்டிக் கொண்டு இருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். வென்றவர்களையும், தோற்றவர்களையும் அவள் பார்ப்பதும் வித்தியாசமாகவே.
தமிழர்களை பொறுத்தவரை நீதியோர் எட்டாக் கனி, ஏணி வைத்தால் அதனை விட உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிடும்.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Mawali Analan அவர்களால் வழங்கப்பட்டு 02 Jun 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Mawali Analan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
-tamilwin.com