சிங்களப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம்கள்!

இலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த இயற்கை அனர்த்த நிவாரணப் பணிகளில் மதங்களைக் கடந்த மனிதாபிமானம் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுள்ளது.

இதன் ஒரு கட்டமாக பாதிக்கப்பட்ட சிங்களப் பகுதிகளில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாத்தறை மாவட்டத்தின் சிங்களப் பகுதிகளிலும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் களுத்துறை மாவட்ட சிங்களப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

எதிர்க்கட்சித்தலைவர் ஆர். சம்பந்தன் இரத்தினபுரியில் நிவாரணப் பணிகளை முன்னெடுத்து சிங்கள மக்களுடன் தனது நேசத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதே போன்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மற்றும் சிவன் பவுண்டேசன் தலைவர் கணேஷ் வேலாயுதம், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் காலி பத்தேகம பிரதேசங்களில் நிவாரணப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது நிவாரணப் பொருட்களுடன் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான காசோலையொன்றும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்காக தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே களுத்துறையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முஸ்லிம் தரப்பினருக்கு பௌத்த விகாரையொன்றில் தொழுகை நடத்துவதற்கான இடவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரையின் தேரரே முன்னின்று மதங்களைக் கடந்த மனிதாபிமானத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதே போன்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவரான ஷம்மி குணவீர, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்களைத் தேடிச்சென்று இரத்தினபுரி, கேகாலை, காலிப் பிரதேசங்களில் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் மட்டும் சுமார் 30லட்சம் ரூபாவுக்கும் மேலான பெறுமதி கொண்ட நிவாரணப் பொருட்களை அவர் விநியோகித்துள்ளார்.

இதற்கிடையே களுத்துறையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களுக்கு சகோதர உணர்வை வெளிக்காட்டும் வகையில் களுத்துறை விஜயாராம விகாரையின் விகாராதிபதி தேரர், நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ள விடயமும் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-tamilwin.com

TAGS: