படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசேட விசாரணைகுழு வேண்டும்: யோகேஸ்வரன்

படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஒரு விஷேட விசாரணைக்குழுவை நல்லாட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜ.நடேசனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட கவனஈர்ப்பு போராட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

இங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர்,

நல்லாட்சி அரசாங்கம் கொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்தின் பாரிய கடமையில் அது ஒன்றாக இருக்கின்றது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் வந்து இரு வருடங்கள் நெருகின்ற போதிலும் இது வரையும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை.

இது விடயமாக பாராளுமன்றத்திலும் பல தடவைகள் குரல் எழுப்பியுள்ளோம். நாங்கள் இந்த நாட்டின் ஆட்சிக்கு ஓரளவு ஆதரவு கொடுப்பவர்கள் என்ற ரீதியில் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரிடத்தில் கேட்டுக் கொள்வது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் கொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.

இதற்கு நல்லாட்சி அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் நல்லாட்சி அரசாங்கம் என்று இந்த அரசாங்கத்தை கூறமுடியாது. ஊடகவியலாளர்களை கொலை செய்த மற்றும் காணாமல் ஆக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்

ஒரு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஜனநாயக நாடு என்று கூறுகின்ற இலங்கையில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட வரலாறும் காணாமல் ஆக்கப்பட்ட வரலாறும்தான் இங்கு மலிந்து கிடக்கின்றது.

கடந்த ஒவ்வொருவரின் ஆட்சிக்காலத்திலும் பல ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டதையும் கொலை செய்யப்பட்டதையும்தான் வரலாறுகளாக இருக்கின்றன.

இது தொடர்பில் எந்த அரசாங்கமும் இந்த கொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்யவில்லை.

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றை நடாத்துவதற்கு இன்னும் முன் வந்ததாக தெரிய வில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு ஊடகவியலாளர்களும், பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்கள் மற்றும் அதற்கு முன்னரும் பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் தமிழ் முஸ்லிம் சிங்கள ஊடகவியலாளர்கள் அடங்குகின்றனர் என்றார்.

 

-tamilwin.com

TAGS: