பிரான்ஸில் தொடரும் தாக்குதல்களின் எதிரொலி! ஜனாதிபதி சிறப்பு முடிவு

தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொள்ளவதற்கென சிறப்பு படை ஒன்றை ஏற்படுத்துவதற்கான முடிவினை பிரான்ஸ் எடுத்துள்ளது.

அண்மைக் காலமாக தீவிரவாதத் தாக்குதலினால் உலகம் முழுவதும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், பிரான்ஸ் நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது போன்ற தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கென்று சிறப்பு படைப்பிரிவு ஒன்று உருவாக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் பிரான்ஸில் சுமார் 230 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலான தாக்குதல்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் நடத்தப்பட்டுள்ளன. இதனால், புதிதாக சிறப்பு தீவிரவாத தடுப்புப்படையை உருவாக்க பிரான்ஸ் அரசு முடிவெடுத்தது.

புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மேக்ரானின் யோசனையில் இந்த சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த இருதினங்களுக்கு முன்னர் நோட்ரே தாமே நகரில் போலீசார் மீது சுத்தியலால் தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் அமைதியினையும் பேணுவதற்கான முடிவாக இது அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் வண்ணம் இந்த படை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் பங்களிப்பில் இந்த சிறப்பு படை இயங்கும் எனவும், மற்ற படைகளை ஒருங்கிணைக்கும் விதமாகவும் இந்த சிறப்பு படை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

-tamilwin.com