ஒரு நாடு ஒரு திட்டம்! மற்றைய நாடுகளுக்கு எதிரானது இல்லை: ரவி கருணாநாயக்க

raviஒரு நாடு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, அது மற்றொரு நாட்டுக்கு எதிரானது அல்ல வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,

பிராந்திய வர்த்தகம் முன்னோக்கி நகர வேண்டும். ஒரு நாடு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, அது மற்றொரு நாட்டுக்கு எதிரானது அல்ல.

சீனாவுக்கு ஹொங்கொங் ஒரு ஆரம்பத் தளமாக இருந்தது போல, இந்தியாவின் பொருளாதார செயற்பாடுகளுக்கான கேந்திரமாக இலங்கை மாறலாம்.

சீனாவைப் போலவே, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் இந்தியாவின் முதலீடுகளை வரவேற்கிறோம்.

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு புதிய கொள்கலன் முனையங்கள் கட்டப்படவுள்ளன. இந்த திட்டத்தில் இரண்டு இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்புகள் ஆர்வம் கொண்டுள்ளன.

சீனாவின் அணை மற்றும் பாதை திட்டத்தில் இலங்கையின் ஈடுபாடு குறித்து, எனது புதுடெல்லி பயணத்தின் போது, இந்திய அரசாங்கம் கவலை எதையும் எழுப்பவில்லை.

இந்திய அரசாங்கம் இதுகுறித்து முன்னர் கவலை தெரிவித்தது. இதனை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கவனத்தில் எடுத்து முடிவு செய்திருந்தனர். இப்போது தமது முடிவை மீளாய்வு செய்வதாக இந்தியா என்னிடம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரு சிறிய நாடு. நாம் எவரையும் பகைமையுடன் பார்க்கவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கையையே கடைப்பிடிக்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், சீன முதலீடுகளின் மூலம் 3000 தொடக்கம் 5000 ஆண்டுகள் பழைமையான கப்பல் பாதை இலங்கையில் புத்துயிர் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவினுடான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

-tamilwin.com
TAGS: