‘முஸ்லிம் மக்கள் மீது அண்மைய நாட்களில் தாக்குதலை நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும். அவர்களைக் கைது செய்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் கூறியுள்ளார்.
ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தின் போது அளுத்கம பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை யார் முன்னெடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள்தான் தற்போது பல்வேறு இன மோதல்களை முன்னெடுக்கின்றனர்.
அவர்களை வெகு விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்காக விசேடமாக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல ஞானசார தேரரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஞானசார தேரர் குறிப்பிடுவது போன்று மரண அச்சுறுத்தல் அவருக்கு இருபதாக எனக்கு தெரியவில்லை. யார் வேண்டும் என்றாலும் தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது என்று குறிப்பிட முடியும்.
ஞானசார தேரர் கூறுவது போன்று தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இனங்களுக்கு இடையில் தாக்குதல்களை முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவர் சார்ந்த சமூகம் தொடர்பான பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் கேட்கின்றார். அது அவருடைய உரிமை.” என்றுள்ளார்.
-puthinamnews.com