யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முப்படையினருக்கும் உத்தரவு வழங்குவேன் என ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடகிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை இன்று மாலை 4 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே மேற்படி உத்தரவாதத்தை தமக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளனர்.

மேற்படி சந்திப்புக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்ப ட்டவர்களின் உறவினர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,

2008ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையிலான போரின் இறுதி காலப்பகுதியில் சரணடைந்தவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுங்கள்.

போர் நிறைவடை ந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம்கள் மற்றும், தடுப்பு முகாம்களை அடையாளப்படுத்தி அவற்றை பார்வையிடுவதற்கு அனுமதியளியுங்கள்,

1983ம் ஆண்டு தொடக்கம் இயங்கிய வதை முகாம்கள், தடுப்பு முகாம்களை ஆண்டு வாரியாக பட்டியலிடுங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுங்கள் என்பன உள்ளடங்கலாக 5 கோரிக்கைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும் இணைந்து முன்வைத்திருந்தனர்.

இதனை தனது வாயால் வாசித்து காண்பித்த ஜனாதிபதி நாளை மாலை நடைபெறவுள்ளதே சிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துங்கள் என உத்தரவிடுவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்களை கண்டதாக சில சாட்சிகள் உள்ளமை தொடர்பாக குழு ஒன்றை அமைத்து விசாரிப்பதற்கும் ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக தொடர்ந்து அவதானிப்போம் என சிவில் சமூக பிரதிநிதிகள் மேலும் கூறியுள்ளனர்.

-tamilwin.com

TAGS: