அமெரிக்காவுக்கு ரகசியங்களை விற்றாரா வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர்?

kim jong namவடகொரிய ஜனாதிபதியின் சகோதரரான கிம் நாம் படுகொலை செய்யப்பட்டபோது அவரிடம் ஒன்றரை லட்சம் டொலர் பணம் கைவசம் இருந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் வடகொரிய ஜனாதிபதியின் சகோதரரான கிம் நாம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மலேசிய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் கிம் நாம் படுகொலை செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து புத்தம் புதிய 100 டொலர் தாள்கள் கொண்ட 4 கட்டு பணம் கைப்பற்றியுள்ளதாக பெயர் வெளிப்படுத்த விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிம் நாம் படுகொலை செய்யப்படுவதின் நான்கு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க குடிமகன் ஒருவரை ஹொட்டல் ஒன்றில் சந்தித்து பேசியதாகவும், வடகொரியா குறித்த ஏதேனும் ரகசிய தகவல்களை கிம் நாம் அந்த அமெரிக்கருடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணமானது, மலேசியாவில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் பரிமாற்றம் செய்யப்படவில்லை எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

45 வயதான கிம் நாம், கடந்த பிப்ரவரி 13 ஆம் திகதி, கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து மக்காவு செல்ல காத்திருந்த போது மர்ம நபர்களால் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் உயிர்கொல்லும் மருந்தை பயன்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இந்தோனேசியா மற்றும் வியட்நாம் நாடுகளை சேர்ந்த இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

-lankasri.com