அமெரிக்கா – வட கொரியா பிரச்சினைக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முடிவு தெரியாமல் இருக்கும் நிலையில், வட கொரிய தரப்பு, நியூயார்க் மீது அணு குண்டு போடுவது தங்களுக்கு சிரமமான காரியம் இல்லை என்று மிரட்டல் விடுத்துள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுதங்கள் சோதனை குறித்து அமெரிக்கா, தொடக்க காலம் முதலே ஆட்சேபனை தெரிவித்து வந்தது. ஆனால், ‘எங்கள் தற்காப்புக்கு நாங்கள் அணு ஆயுத சோதனை செய்வதை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது’ என்று பதிலடி கொடுத்தது வட கொரியா.
அவ்வளவுதான், அன்று பற்றிக் கொண்டது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை. அது இன்று வரை ஓய்ந்தபாடில்லை.
அமெரிக்கா, கொரிய தீபகற்பத்துக்கு கடந்த சில நாள்களாக அதிக இராணுவத் துருப்புகளை அனுப்பி வருகிறது.
இந்நிலையில், வட கொரிய அரசின் செய்தித்தாளான ரோடங் சின்மன் (Rodong Sinmun), ‘ட்ரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில், வட கொரியா என்னதான் அணு ஆயுத சோதனை நடத்தினாலும், அணு குண்டை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தாது என்று அலட்சியமாக தெரிவித்துள்ளார்.
ஆனால், வட கொரியாவிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு அணு ஆயுத குண்டு மூலம் தாக்குதல் நடத்துவது ஒன்றும் சாத்தியமில்லாத காரியம் இல்லை. என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் சொன்ன கருத்துக்கு இப்போது வட கொரியா பதிலளித்திருப்பது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ட்ரம்ப், சமீபத்தில் தனது ஜப்பான் பயணத்தை அடுத்து, ‘வட கொரியாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருங்கள் என்று ஜப்பானிய பிரதமரிடம் கூறியிருந்தார்.
அதேநேரத்தில் இது, அணு ஆயுத சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
– Vikatan