உணவுவிடுதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 20க்கும் மேற்பட்டவர்கள் சிறை பிடிப்பு

சோமாலிய தலைநகர் மொகதீசுவில் பிரபல உணவுவிடுதி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சோமாலிய தலைநகர் மொகதீசுவில் உள்ள பிரபல உணவு விடுதியின் வாசலில் நின்ற கார் மூலம் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தாக்குதலை தொடர்ந்து ராணுவ உடையுடன் உணவு விடுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாகவும் சோமாலிய பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அந்த உணவகத்தில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்துள்ளதாகவும் கேப்டன் முகமது ஹூசைன் தெரிவித்துள்ளார். அந்த உணவு விடுதியில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் எத்தியோப்பியா நாட்டினை சேர்ந்தவர்கள்.

இதில் எத்தனை பேர் தற்போது உயிருடன் உள்ளனர் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 9 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவை சேர்ந்த அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டிருந்த நிலையில், அந்த அமைப்பே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

அந்த விடுதியில் இருந்து ஆசியா, எத்தியோப்பியா, கென்யாவை சேர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர். சோமாலியாவின் மொகதீசுவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் அந்த அமைப்பு, அங்குள்ள முக்கிய இடங்களான ஹோட்டல்கள், ராணுவ பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சோமாலியாவில் புதிய அரசு பதவியேற்று, புதிய ராணுவ அமைப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனை மையமாக வைத்து செயல்படும் மத்திய மூலோபாய அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டில் ஆப்பிரிக்காவில் கொடூரமான தீவிரவாத அமைப்பாக அல்-ஷபாப் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அமைப்பால் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4,200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com