வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாக கூறி வடமாகாண சபையின் 15 உறுப்பினர்கள் ஆளுநருக்கு இன்று பெயர் பட்டியலையும், சத்திய கடதாசியையும் சமர்பித்திருக்கின்றனர்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முறைகேட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமையினையடுத்து வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேர் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையினை சமர்பித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் இரவு 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன் விந்தன்கனகரட்ணம் ஆகியோர் முதலமைச்சர் மீது நம்பிக்கை உள்ளது என 15 மாகாணசபை உறுப்பினர்களின் கையொப்பங்களையும் சத்திய கடதாசிகளையும் வழங்கியிருக்கின்றனர்.
இதேவேளை முதலமைச்சருக்கு சார்பாக எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.தியாகராஜா, ஜீ.குணசீலன், ஆர்.இந்திரராஜா, து.ரவிகரன், கே.சிவநேசன், தி ருமதி அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன், விந்தன் கனகரட்ணம்,ஏ.புவனேஸ்வரன், செ.மயூரன், ஜீ.ரி.லிங்கநாதன், ப.கஜதீவன், சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இவர்களில் 2 பேர் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் என்பதுடன் மற்றயவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை மேற்படி பெ யர்பட்டியலையும் சத்திய கடதாசியையும் சமர்பித்து மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில்,மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் இந்த பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக முதலமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.
இதனடிப்படையில் அவர்களுடைய நம்பிக்கையில்லா தீர்மானம் மீள பெறப்படவேண்டும். இல்லையேல் நாங்கள் மாகாணசபையில் முதலமைச்சரின் பெரும்பான்மையை நிருபிப்போம் அது தமிழர்களின் வெற்றியாக அமையும் என்றார்.
முதலாம் இணைப்பு
வடமாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆளுநரை சந்தித்து முதலமைச்சருக்கு சார்பாக பிரேரணை ஒன்றிணை கையளித்துள்ளார்.
குறித்த சந்திப்பு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், வட மாகாண உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் மற்றும் சர்வேஸ்வரன் உட்பட 15 பேர் கொண்ட குழு இந்த பிரேரணையினை ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.
அத்துடன், ஆளும் கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்கள் மற்றும் டெலோ கட்சியிலிருந்து சென்ற ஒருவர் சேர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிவாஜிலிங்கம், நாங்கள் 4 கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்கள் பிரேரணை ஒன்றிணை முன்வைத்துள்ளோம்.
இதில் பதில் கிடைக்காவிட்டாலும் சபையில் இதற்கான பெரும்பான்மையை பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்கள்- சுதந்திரன்
-tamilwin.com