நெருக்கடியான சூழலுக்கு முதலமைச்சரின் பதவி நீடிப்பே சரியான தீர்வு!

தற்போது வட மாகாணத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழலுக்குச் சுமூகமானதொரு தீர்வு காண வேண்டுமெனில் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலப் பகுதியிலும் முதலமைச்சரே பதவியில் நீடிக்க வாய்ப்பை வழங்குவதே சரியானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பகரமான நிலைவரம் தொடர்பில் இன்று மாலை எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக விசேட பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட நாடுகளுக்கும், இலங்கை மீதான நலன்களைப் பிரயோகிக்கின்ற நாடுகளுக்கும் வட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் குறிப்பாக வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் மற்றும் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்திய தீர்மானங்கள் தென்னிலங்கை அரசுக்கு மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் ஒரு சர்ச்சையான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆய்வாளர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஒவ்வொருவரையும் சந்திக்கின்ற போதும் முதலமைச்சர் தமிழர்களுடைய உண்மையான பிரச்சினைகளின் பக்கங்களை உலகத்திற்குத் தெரியப்படுத்த முயற்சித்ததன் பின்புலமும் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பின்னாலுள்ள முக்கிய காரணியாக நான் கருதுகிறேன்.

இந்த நீண்ட அவதானிப்பும், இதனைத் தீர்த்துக் கொள்வதற்கு மாற்று வழியில்லை என்ற அடிப்படையிலும் தான் எங்கள் கைகளை வைத்தே எங்கள் கைகளைக் குத்தியதைப் போன்று இந்தப் பின்புலத்திலிருந்து சக்திகள் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால், ஏறக்குறைய தமிழரசுக் கட்சிக்குள் இந்த விவகாரம் தீர்த்துக் கொள்ளப்படக் கூடியது. தற்போது இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்குப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்களோ இதே விடயத்தைக் கட்சியின் தலைமை குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் முதலமைச்சருடன் உரையாடி துயரப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தலைவரைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டிருக்க முடியும்.

அந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் தலைமை அந்தப் பொறுப்பைச் சரிவரைச் செய்யத் தவறியதன் விளைவே இந்தப் பின்புலத்திலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு இலகுவான வாய்ப்புக் கிடைப்பதற்கு வழி கோலியது.

வட மாகாண முதலமைச்சருக்கெதிரான நடவடிக்கையூடாகப் பாரியதொரு நெருக்கடியைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தவிடத்திலிருந்து இந்தச் சூழலை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குச் சில உத்திகளை வகுக்க வேண்டிய பொறுப்பான்மை தமிழ் அரசியல் தலைமைகளிடம் நிச்சயமுண்டு.

இத்தகைய அரசியல் சூழலைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நகர்வுகளை மேற்கொள்வதும், அடுத்தகட்டச் சூழலில் இலகுவாகச் சுதாகரித்துக் கொண்டு இலகுவாக வெற்றி கொள்வதும் எங்களிடமுள்ள மிக முக்கிய தேடலாக அமைகின்றது.

தமிழரசுக் கட்சியில் காணப்படுகின்ற உணர்ச்சிவசப்படும் தலைவர்கள், தங்கள் சுயநலன்களை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும் கட்சி உறுப்பினர்கள், கட்சியில் உறுப்பினர்களாகவிருந்தவாறு தங்கள் இலாபங்களுக்காகவும், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவும் செயற்படுகின்ற ஒவ்வொரு நபர்களையும் இனங்கண்டு அவர்களைக் கட்சியிலிருந்து ஓரங்கட்டி விட்டுக் கட்சியைச் சரியானதொரு வடிவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தலைமைக்குரியது.

வடமாகாணத்தில் உருவாகியுள்ள நெருக்கடியான சூழலுக்குப் பின்னர் தமிழர்கள் எத்தகையதொரு தலைவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விரும்புகிறார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சருடைய அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதனையே கடந்த சில நாட்களாக இடம்பெறுகின்ற சம்பவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

ஆகவே, இந்தச் சூழல் தமிழ்மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையையும், பலத்தையும், தமிழர்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியம் மீதான பற்றுதல்களுடன் இருக்கிறார்கள் என்பதனையும் புலப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக எமது இளைஞர்கள் வீதியிலிறங்கி முதலமைச்சரைப் பாதுகாக்கும் வகையில் முன்னனெடுத்த ஒவ்வொரு நகர்வுகளையும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் உணரவேண்டிய, சிந்திக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

ஆகவே, தமிழ்ச் சமூகத்தின் அடுத்த கட்ட எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாகத் தமிழ் அரசியல் தலைமைகள் எங்களுடைய பிரச்சினைகளின் உண்மைத் தன்மைகளை இனங்கண்டு சர்வதேச மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் எங்கள் பிரச்சினைகளை எடுத்துச் செல்லக் கூடிய தலைவர்களை அடையாளப்படுத்துவதும், அவர்களை முன்னிறுத்துவதும் அவசியமானது.

அந்த வகையில் தந்தை செல்வாவினால் எத்தகைய துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் செயற்பட்டாரோ அதற்கமைவாகவே முதலைமைச்சருடைய நகர்வுகள் அமைந்திருக்கிறது என்பது தமிழ் மக்களால் இனங்காணப்பட்டிருக்கிறது.

ஆகவே, தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வினை நோக்கி நகர்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தித் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பான்மைக் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

தமிழசுக் கட்சியில் தவறிழைக்கக் கூடிய உறுப்பினர்களை ஓரங்கட்டி விட்டு அல்லது தனிமைப்படுத்தி விட்டு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய பெரும்பான்மை தமிழ்த் தலைவர்கள் எல்லோருக்குமுண்டு.

இந்தவிடத்தில் குளிர் காய்வதோ, தங்களுடைய அரசியல் இலாபங்களை மட்டும் நோக்கி நகர்வதோ அல்லது தங்களுடைய அரசியல் விருப்புக்களை அடைவதற்காக வடமாகாண முதலமைச்சரையோ அல்லது அரசியல் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வதோ என்னைப் பொறுத்தவரையில் தவறானதொரு விடயம்.

மாற்றீடாகத் தமிழர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளக் கூடிய சூழலை இந்தச் சந்தர்ப்பத்தில் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயம் தமிழரசுக் கட்சி சார்ந்திருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் இயங்கி வரும் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தெளிவானதொரு திட்டமிடலுடன், தெளிவான உத்தியுடன் அடுத்த கட்டம் நோக்கித் தங்களை நகர்த்துவதற்கான நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இதற்குரிய தீர்வுகளைக் காணுவதன் ஊடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினையின் அடுத்த கட்டத் தளத்தை நோக்கி உறுதியுடன் பயணிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

-tamilwin.com

TAGS: