ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?!

vikneswaran111விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிட்டால் அது தோல்வி. முன்னெடுத்தாலும் அது தோல்விதான். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவர்கள் வென்றாலும் அது தோல்விதான். தோற்றாலும் அது தோல்விதான். இதைச்சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இப்போதுள்ள எண்ணிக்கை நிலவரங்களின்படி முதலமைச்சருக்கு எதிரான அணியானது அரசு தரப்பு மற்றும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான தரப்புக்களோடு கூட்டுச் சேர்ந்தால் மட்டுமே விக்கினேஸ்வரனைக் கவிழ்க்கலாம் என்று தோன்றுகிறது. அங்கே ஒரு கொள்கைப் பிரச்சினை வரும். முதல்வரைக் கவிழ்ப்பதற்காக கொள்கை எதிரிகளோடு கூட்டுச் சேர்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கும். அதுவும் நீதியை நிலைநாட்டுவதற்காக கட்சிக்கு கட்டுப்பட மறுத்தார் என்ற ஒரு குற்றச்சாட்டின் பேரிலேயே அவரைக் கவிழ்க்க வேண்டியிருக்கும். இவ்வாறு கொள்கையைக் கைவிட்டு கூட்டுச் சேர்ந்தாலும் அது ஒரு சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கும். எனவே கொள்கை ரீதியாகப் பார்த்தால் அது ஒரு சறுக்கல்தான். தோல்விதான். அதாவது வென்றாலும் அது ஒரு தோல்விதான்.

 

அதே சமயம் வாக்கெடுப்பில் விக்கினேஸ்வரன் பெரும்பான்மையை நிரூபித்தால் அதுவும் தோல்விதான். அதன் பின் விக்கினேஸ்வரன் மாகாண சபைக்குள் பலமடைந்து விடுவார். அவரைக் கவிழ்க்க முயன்றவர்கள் எந்த முகத்தோடு மாகாண சபைக்குப் போவது? அங்கே விக்கினேஸ்வரனோடு எந்த அடிப்படையில் சேர்ந்தியங்குவது? இப்படிப் பார்த்தால் இப்போதுள்ள வட மாகாண சபையானது அதன் கூட்டுணர்வை இனிமேல் திரும்பப் பெறவே முடியாது.

ஆனால் விக்கினேஸ்வரனைப் பொறுத்தவரை இப்போதுள்ள நெருக்கடிகளை அவர் வெற்றி கொண்டாலும் அது வெற்றிதான். அதில் அவர் தோற்றாலும் வெற்றிதான்.

வாக்கெடுப்பு நடக்கவில்லையென்றால் அதுவும் அவருக்கு வெற்றி. வாக்கெடுப்பு நடந்து அதில் அவர் வென்றால் அவருடைய நீதிக்கும், கொள்கைக்கும் கிடைத்த வெற்றியாகவும், அங்கீகாரமாகவும் அது அமையும். ஓர் அக்கினிப் பரீட்சையிலிருந்து மீண்டெழுவதாக அது அமையும். தோற்பாராக இருந்தால் ஒன்றில் அவர் ஒரு நீதிபதியாக அரசியலை விட்டு ஒதுங்கக்கூடும். அல்லது சீண்டப்பட்டவராக ஒரு குத்துச்சண்டை வீரனைப் போல அடுத்த சுற்று மோதலுக்கு தயாராகக்கூடும். அவர் தனது இளமைக்காலத்தில் ஒரு குத்துச்சண்டை வீரனாக இருந்தார் என்பதை இங்கு சுட்டிக் காட்டலாம்.

அவர் ஏற்கெனவே ஒரு நீதிபதியாகத்தான் ஓய்வு பெற்றார். அது சட்டத்துறையில். இப்பொழுது அரசியலிலும் ஒரு நீதிபதியாக. அதாவது, எனக்கு நீதி என்று பட்ட ஒன்றை நிலைநாட்டியதற்காகத் தோற்கடிக்கப்பட்டேன் என்ற திருப்தியோடு. அரசியலை விட்டு ஒதுங்கலாம். அப்படிப்பார்த்தால் அதுவும் அவருக்கு வெற்றிதான். மாசற்ற அரசியலை நோக்கி ஓர் உயிருள்ள முன்னுதாரணத்தை செய்து காட்டியவர் என்ற பெருமை அவரைச் சேரும். ஒரு நீதிபதியாகவே வந்தேன். ஒரு நீதிபதியாகவே போகிறேன் என்று கூறிவிட்டுப் போய்விடலாம்.

அல்லது தனது நீதிக்காக தன்னை தோற்கடித்தவர்களை மற்றொரு சுற்றில் தோற்கடிப்பது என்று வைராக்கியம் பூண்டு ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்க முன்வரக்கூடும். பொதுவாக குத்துச்சண்டை வீரர்களின் இயல்பும் அதுதான். தமிழ் டயஸ்பொறாவில் உள்ள முக்கியமான ஓர் அரசியல் ஆய்வாளரான வேல் தர்மா தனது தளத்தில் சில நாட்களுக்கு முன் குத்துச்சண்டை தொடர்பில் பிரசுரித்திருந்த ஒரு மேற்கோளை இங்கு சுட்டிக் காட்டலாம். ‘வாழ்க்கையானது குத்துச்சண்டையையொத்த ஒரு விளையாட்டுத்தான். நீங்கள் கீழே விழும் பொழுது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. நீங்கள் மீண்டெழுவதை நிராகரிக்கும் போதே அது தோல்வியாக அறிவிக்கப்படுகின்றது.’ விக்கினேஸ்வரனும் கவிழ்க்கப்படும் பொழுது ஒரு குத்துச்சண்டை வீரனைப்போல துள்ளி எழுவாரா? அதாவது அக்கினிப் பரீட்சையில் உருக்கி புடமிடப்பட்டவராக மேலெழுவாரா?

அவருக்கு ஆதரவாக கடையடைப்பையும், ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்குபடுத்தும் ஒரு சந்திப்பை தமிழ் மக்கள் பேரவை வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது விக்கினேஸ்வரன் மாற்று அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்பதை அழுத்திக் கூறியிருந்தது. நல்லூரில் தொடங்கி அவரது வசிப்பிடத்தை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப்பைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டார்கள். அவர்களைத் தவிர படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் அதில் பங்குபற்றியிருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உரையாற்றிய விக்கினேஸ்வரன் நம்பிக்கை தொனிக்கப் பேசினார். பின்வாங்கப் போவதில்லை என்பதனை குறிப்பால் உணர்த்தும் விதத்தில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது. அதற்கு முதல் நாள் அவரைச் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்களோடும் அவர் தன்னம்பிக்கையோடு கதைத்திருக்கிறார். அச்சந்திப்புக்களில் ஒரு மாற்று அணியை உருவாக்கத் தேவையான ஒரு மனோநிலை அவரிடம் முன்பை விட அதிகமாகக் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு மாற்று அணியை அவராக உருவாக்கத்தக்க ஒரு வாழ்க்கை ஓழுக்கம் அவருக்கில்லை. ஒரு கட்சியை அல்லது அமைப்பைக் கட்டியெழுப்பத் தக்க ஓர் ஆளுமை அவரல்ல. ஆனால் ஏனையவர்கள் ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி விட்டு அழைத்தால் அவர் தனக்குரிய ஆசனத்தில் போய் அமர்வார். மாகாண சபைக்குள்ளும் அவர் அப்படித்தான் அழைத்து வரப்பட்டார். தமிழ் மக்கள் பேரவைக்குள்ளும் அவர் அப்படித்தான் அழைத்து வரப்பட்டார். ஒரு மாற்று அணிபொறுத்தும் அப்படித்தான் நடக்கக்கூடும். அதாவது தமிழரசுக் கட்சியானது விக்கினேஸ்வரனை அவருடைய முகத்தில் குத்தியதன் மூலம் சீண்டிவிட்டிருக்கிறது. சில சமயம் அவர் ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திப்பதற்கு தமிழரசுக் கட்சியே காரணமாகவும் அமையலாம். அவருக்கும், சம்பந்தருக்குமிடையே வர்க்க குணாம்சங்களைப் பொறுத்தவரை ஒற்றுமைகளே அதிகம் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மூத்த ஊடகவியலாளர் கூறுவார். விக்கினேஸ்வரன் சம்பந்தரின் மீது அதிகம் மதிப்பைக் கொண்டிருக்கிறார். அவர் தானாக சம்பந்தரை உடைத்துக் கொண்டு வெளியே வரமாட்டார் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தமிழரசுக் கட்சியானது அவரை வெளியே தூக்கி வீசுமாக இருந்தால் அவர் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார்?

ஒரு நீதிபதியாக இருந்தவரை அரசியல்வாதியாக்கிய அதே தமிழரசுக் கட்சியே அவரை இப்பொழுது ஒரு தலைவராகவும் செதுக்கி வருகிறதா? மாகாண சபையில் தனது முடிவை வாசித்தறிவித்த பொழுது அவர் பேசியவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அது தெரியவரும். ஒரு நீதிபதியாகத்தான் அவர் தீர்ப்பை வழங்கினார். ஆனால் மக்கள் கருத்தை எல்லாவற்றையும் விட மேலானதாக உயர்த்திக் காட்டுகிறார். அமைச்சர்கள் குற்றம் இழைத்தார்களோ இல்லையோ மக்கள் அப்படிக் கருதுவதனால் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற தொனிப்பட அவர் உரையாற்றினார். அமைச்சர்களின் தன்னிலை விளக்கம் குறித்தும் மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதே முக்கியம் என்ற தொனிப்பட அவர் உரையாற்றினார். தன்னை மக்களே ஒரு முதலமைச்சராகத் தெரிந்தெடுத்தார்கள் என்றும் அந்த உரையின் இறுதியில் கூறுகிறார். வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பொழுதும் மக்களின் ஆதரவைக் கண்டு அவர் மனமுருகினார். எனது பாதை சரி என்பதை மக்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்றும் கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் அவரை ‘மக்கள் முதல்வர்’ என்று விளித்தார்கள். மாகாண சபைக்குள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதிகபட்சம் நீதிபதியாகவும் குறைந்தளவே தலைவராகவும் நிர்வாகியாகவும் செயற்பட்ட ஒருவரை தமிழரசுக் கட்சியானது கவிழ்க்க முற்பட்டு ஒப்பீட்டளவில் முன்னரைவிடக் கூடுதலான அளவு ஒரு தலைவராக மாற்றி வருகிறதா?

ஒரு பழுத்த அரசியல்வாதியான சம்பந்தருக்கு இது தெரிகிறது. அவருக்கு மூன்று பிரச்சினைகள் உண்டு. முதலாவது தனக்கு நிகராக அல்லது தன்னை விட மேலாக தனது கட்சிக்குள்ளேயே ஒரு தலைமை மேலெழுவதை எப்படிச் சமாளிப்பது? இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஒரு பலமான எதிரி உருவாகக் கூடும் என்ற ஒரு கணிப்பு. மூன்றாவது விக்கினேஸ்வரனைக் கவிழ்ப்பதற்காக கொள்கை எதிரிகளைச் சரணடைவதன் மூலம் தமிழரசுக் கட்சியானது சுயசிதைவை அடைந்து விடுமோ என்ற அச்சம்.

இப்போதுள்ள தமிழ்க்கட்சிகளில் மூத்த அனுபவத்தால் பழுத்த ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான். பல தசாப்தகால பாரம்பரியத்தையும், ஒப்பீட்டளவில் பலமான ஒரு கட்சிக் கட்டமைப்பையும் அது கொண்டிருக்கிறது. இப்போதுள்ள தமிழ்க் கட்சிகளில் ஒப்பீட்டளவில் பலமான கட்சிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது தமிழரசுக்கட்சியும், ஈ.பி.ஆர்.எல்.எப்பும் தான். அதிலும் தமிழரசுக்கட்சியானது மூத்த அனுபவஸ்தர்களையும், தொடர்ச்சியறாப் பாரம்பரியத்தையும் கொண்டிருக்கிறது. ஆனால் விக்கினேஸ்வரனின் விடயத்தில் அக்கட்சியானது கொள்கையைப் பற்றி சிந்தித்ததோ இல்லையோ ஆகக் குறைந்தபட்சம் கட்சியின் எதிர்காலம் என்ற நோக்குநிலையிலிருந்து கூட சிந்திக்கவில்லையென்றே தோன்றுகிறது. இது சில சமயம் அக்கட்சியை பிளவுபடுத்தக்கூடும். உடனடிக்கில்லையென்றாலும் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகத் தெரிகின்றன. தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்தும் ஓர் அணி வெளியேறி ஏனைய கட்சிகளோடு இணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்குமாக இருந்தால் அதற்கு விக்கினேஸ்வரன் தலைமை தாங்குவாராக இருந்தால் அது ஈழத்தமிழ் அரசியலில் ஒரு புதிய ஓட்டத்தை உருவாக்கக்கூடும்.

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவை அல்ல. அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டவை அவை. வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்கள் முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களால் சில மணித்தியாலங்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்டவைதான். அவற்றில் முந்நூறுக்கும் குறையாதவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். வெள்ளிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டமும் ஓர் அவசர ஏற்பாடுதான். அதில் ஆயிரத்திற்கும் குறையாதவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இவ்விரு ஆர்ப்பாட்டங்களிலும் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவர்கள் மட்டும்தான் பங்குபற்றினார்கள் என்பதல்ல. தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் சிலரையும் அங்கே காண முடிந்தது. நீதி வழங்கியதற்காக விக்கினேஸ்வரனை அகற்றியது தொடர்பில் அவர்களுக்கும் கட்சியோடு உடன்பாடில்லைப் போலும்.

வெள்ளிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் நல்லூரிலிருந்து கோவில் வீதி வழியாக விக்கினேஸ்வரனின் வசிப்பிடத்தை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்த பொழுது ஒரு மூத்த புலமையாளர் என்னோடு சேர்ந்து நடந்து வந்தார். அவர் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஒரு தேர்தல் தொகுதிக்கு கட்சி அமைப்பாளராகவும் இருந்தவர். அவர் வேடிக்கையாக என்னிடம் சொன்னார். ‘இந்த ஊர்வலத்தில் என்னைக் கண்டால் எனது கட்சிக்காரர்கள் சில நேரம் என்னை அடித்து நொறுக்கக்கூடும். அப்படி யாரும் தாக்கினால் அதன் பின் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடுவேனாக இருந்தால் அது எனக்கு அதிகரித்த வெற்றி வாய்ப்புக்களைப் பெற்றுத் தருமா? ‘என்று. அவர் அதைப் பகிடியாகத்தான் சொன்னார். ஆனால் அந்தப் பகிடிக்குள்ளும் சமகால அரசியலை உணர்த்தும் ஒரு செய்தி மறைந்திருக்கிறதா?

-4tamilmedia.com

TAGS: