சவுதி அரேபியாவில் எண்ணெய் வளம் மிகுந்த கிழக்குக் கடற்கரை அல்-அயாமியா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஷியைட் நகரம். 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த வரலாற்று நகரம், முன்னர் அல்-மொசாவரா என்று அழைக்கப்பட்டது.
இந்நகர் ஒருகாலத்தில் வர்த்தக வீதிகள் நிறைந்த செழிப்பான நகராகத் திகழ்ந்தது. இத்தகைய சிறப்புமிக்க ஷியைட் நகரை இடித்து தரைமட்டமாகும் பணியை சவுதி அரசு தொடங்கியுள்ளது.
இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மட்டுமின்றி கடந்த மே மாதம் 10 ஆம் திகதி நகரை இடிக்கும் பணியை துவங்கிய சவுதி அரசுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதில் பலர் தாக்கப்பட்டதுடன் சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர். இருப்பினும் சவுதி அரசு தமது முடிவை மாற்றிக்கொள்ளும் நிலையில் இல்லை எனவும் முன்னெடுத்து செல்லவே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நகரை தரைமட்டமாக்க காரணம் என்ன என்று சவுதியின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மன்சூர் அல்-துர்கி தெரிவிக்கையில், ஷியைட் நகர் தற்போது ஈரானை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. அந்நகரில் உள்ள பழமையான வீடுகளைத் தீவிரவாதிகள் ஆக்கிரமித்துவிட்டனர்.
இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதத் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர். எனவே சவுதி அரசு புல்டோசர்களை வைத்து அந்த நகரையே தரைமட்டமாக்கி வருகிறது.
நகரை இடிக்கும் பணிகள் மே மாதம் தொடங்கப்பட்டது. இப்பணிகளுக்குத் தீவிரவாதிகள் இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். சவுதி அரசு இந்தத் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-lankasri.com