வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுகள், திணைக்களங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரிவுக்குழுவை அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்கவேண்டும் எனக் கோரும் பிரேரணை அடுத்த அமர்வில் எடுத்துக்கொள்வதற்காகப் பேரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சுகள் மீது மாத்திரம் விசாரணை நடத்துவதற்கு 4 பேரைக் கொண்ட விசாரணைக்குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
இந்நிலையில், எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபையின் 98 ஆவது அமர்வில் எடுத்துக்கொள்வதற்காகப் பிரேரணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதியால் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில், 2016ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் பற்றி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சம்பந்தமாக மாகாண சபையே ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என்று பிரேரணையை நான் முன்மொழிந்திருந்தேன்.
தற்போது முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில், சுதந்திரமானதும் சட்டபூர்வமானதுமான விசாரணை நடத்தப்படலாம் என்ற இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதனால், வடக்கு மாகாண சபையின் அனைத்து அமைச்சர்கள், அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில்நடைபெற்றதாகக் கூறப்படும்
ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் சம்பந்தமாக விசாரித்து சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் முன்மொழியப்படுள்ளது.
-tamilwin.com