பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த அடக்கு முறைக்கு எதிராகவும், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டியும் அங்கு போராட்டமும் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நீடிக்க செய்ய பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வைத்துதான் பயிற்சிகளை அளித்து வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ராணுவம் அடக்குமுறை காரணமாக பயங்கரவாத முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி அளிக்கப்படும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள் எதுவும் வெளிவர முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் உள்ளது.
அங்கு மக்களை பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் சேர்ந்து கொலை செய்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா – பாகிஸ்தான் இணைந்து செயல்படுத்தி வரும் ‘சி.பி.இ.சி.’ திட்டம் மற்றும் பாகிஸ்தானில் நிலவும் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிரியா பகுதியில் பாகிஸ்தான் மற்றும் அதன் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ஹயாத் கான் பேசுகையில், பயங்கரவாதிகளை இங்கு அனுப்பாதீர்கள் என பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பிரதமரிடம் சொல்லிக்கொள்கிறேன், பயங்கரவாதத்தை வெளியேற்ற நாங்களே தீர்மானித்து உள்ளோம், என கூறினார்.
-dailythanthi.com