வன்முறையற்ற சூழல் உருவாகுமானால் தப்பிச் சென்ற தமிழர்கள் நாடு திரும்புவர் : சம்பந்தன்

sambanthanஅச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர்.

எனவே, அவர்கள் வரவேண்டுமானால் நாட்டில் அமைதியானதும், வன்முறையற்றதுமான சூழலொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை மீள உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றி விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர் என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்துடன் இணங்க முடியாது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர் என்பது, வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசித்தவரும், பயங்கரவாதி, போராளி அல்லது வேறு குழுவின் ஏதேனும் நடவடிக்கையால் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிக்கு முன்னதான எக்காலப் பகுதியிலாவது தங்களது வதிவிடத்தை விட்டுச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவரும் அல்லது கடப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டவரும்.

வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் தங்களது ஆரம்ப வதிவிடத்துக்கு வெளியே தற்போது இலங்கையில் வசிப்பவரும் அல்லது 2012ம் ஆண்டுக்கான தேருநர்கள் இடாப்பின் மீளாய்வு எத்திகதியன்று தொடங்கியதோ அந்த திகதிக்குப் பின்னர் தங்களது ஆரம்ப நிரந்தர வதிவிடத்தில் மீளக் குடியேறியுள்ளவருமான இலங்கை பிரஜை ஒருவர் என்று பொருள்படும் என்று சட்டமூலத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் இராணுவ ரீதியான நடவடிக்கைகளின் விளைவான இடம்பெயர்வுகளை அண்மைய நிகழ்வுகளாக அர்த்தப்படுத்துவதை நான் ஏற்கவில்லை.

தமிழ் ஆயுதப் போராட்டங்கள் 1970களின் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்திருந்தன. எனினும், தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டன.

கடந்த 1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. அதில் 83ல் இடம்பெற்றது. பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னர் 2009ம் ஆண்டு வரை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்வுகளை சந்தித்திருந்தனர். தமிழ் மக்கள் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உடல் ரீதியான தாக்குதல்களே இதற்குக் காரணம்.

இருப்பினும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த பலரும் எந்த நாட்டிலும் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை இல்லாத நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் விருப்பத்துடன் இருக்கின்றனர்.

இதேநேரம், உடல் ரீதியான வன்முறைகள் காரணமாகவே தமிழ் மக்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களில் பெரும் எண்ணிக்கையில் அரச ஊழியர்கள் இருக்கின்றனர்.

இன்று அரச சேவை சீரழிந்த நிலையில் காணப்படுகிறது. உடல் ரீதியான வன்முறைகள் காரணமாக தமிழ் அரச ஊழியர்கள் இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டமை இதற்கான பிரதான காரணமொன்றாகும்.

ஆகவே, விருப்பமுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும். இன்று நாடு வேறு நிலைமையில் காணப்படுகிறது. அதேபோல், எதிர்காலத்தில் கடந்த காலங்களைப் போன்ற சூழல் ஏற்பட்டு விடாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, பாரபட்சமின்மை, சமஅந்தஸ்து உள்ளிட்ட விடயங்கள் அரசமைப்பு ரீதியாக உள்வாங்கப்படும் போதே அவர்கள் திரும்பி வருவதற்கான சாத்தியம் ஏற்படும்.

இதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சரியாக சிந்தித்துச் செயற்படக் கூடியவர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் அதேபோல் வெளியிலும் இருக்கின்றனர். ஆகவே, அரசமைப்பு ரீதியாக இவற்றைச் செய்வது பற்றி சிந்தியுங்கள்.

இந்தச் சட்டமூலத்தை வரவேற்கின்ற போதிலும், வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் இதில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

மேலும், அவர்கள் எந்தவொரு நாட்டினதும் பிரஜையாக இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: