ரஷியாவுடன் “ஆக்கப்பூர்வமாக” பணிபுரிய வேண்டிய நேரம் இது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளியன்று ஜி-20 மாநாட்டில், முதல் முறையாக சந்தித்த போது, அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, புதின் “கடுமையாக மறுத்ததாக” டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த நிலை அவரின் மூத்த அதிகாரிகளுடன் முரண்படுவதாக உள்ளது.
ரஷியாவை “அமெரிக்கா நம்ப இயலாது” என்றும் “ஒருபோதும் நம்பாது” என்றும் ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேய்லி தெரிவித்துள்ளார்.
ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் “இந்த விஷயத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தவில்லை” என்று அர்த்தமில்லை என்றும் அவர் சிஎன்என் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டது அந்நாட்டுடனான நல்லுறவிற்கு முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் ரஷியாவுடன், டிரம்பின் நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டனரா என்பதை சிறப்பு அரசு வழக்கறிஞர் விசாரித்து வருகிறார்.
ஹாம்பர்கில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இரு அதிபர்களும் சந்தித்து அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விவாதித்ததாக இருதரப்பும் ஒப்புக் கொண்டனர் இருப்பினும் அதன் விளைவு குறித்து தெரிவிக்கவில்லை.
தேர்தலில் ரஷிய தலையீடு என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்ற புதினின் ஆணித்தரமான மறுப்பை டிர்ம்ப் ஏற்றுக் கொண்டதாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லஃப்ரோவ் தெரிவித்துள்ளார்.
இரு அதிபர்களும் இதுகுறித்த “வலுவான” விவாதத்தை நடத்தியதாகவும், இதுகுறித்து ரஷிய அதிபருக்கு டிரம்ப் பலமுறை அழுத்தம் கொடுத்ததாகவும் ஆனால் “அழுத்தமான மறுப்பு” தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு குறித்து புதினிற்கு இருமுறை அழுத்தம் கொடுத்ததாகவும் ஆனால் ரஷிய தலையீட்டை புதின் “கடுமையாக மறுத்துள்ளதாகவும்” ஞாயிறன்று அடுத்தடுத்து வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு அதிபர்களும் “ஊடுருவ முடியாத அளவிற்கான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது” குறித்து விவாதித்ததாக அவர் கூறியதை இணையத்தில் பலர் பரிகாசம் செய்துள்ளனர். -BBC_Tamil