முற்றிலும் ஒழிக்கப்பட்டது ஐஎஸ் அமைப்பு… ஈராக் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

isis mosulபாக்தாத்: மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஈராக் அமெரிக்க கூட்டுப்படைகள் மீட்டுள்ளதை அடுத்து அந்நாட்டு மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாக்தாத் நகர தெருக்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

மூன்று ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்தது மொசூல் நகரம். பல கட்ட தாக்குதலுக்குப் பிறகு மொசூல் நகரம் ஈராக் அரசு படைகளின் வசம் தற்போது வந்துள்ளது.

இதனையடுத்து, அந்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. பாக்தாத் நகர சாலைகளில் திரண்ட மக்கள் தங்களது கார்களை அலங்கரித்து, ஒலி எழுப்பி வலம் வந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கூறுகையில், ” மொசூல் நகரை கைப்பற்றியதன் மூலம் கிடைத்துள்ள வரலாற்று வெற்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த வெற்றியினால் நாங்கள் பெற்றுள்ள மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம்.

இந்தத் தருணத்தில் கடவுளுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இனியாவது நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். இனி மொசூல் நகர மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

ஈராக்கில் ஐஎஸ் அமைப்பு முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளது அந்த அமைப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதே போன்று சிரியாவின் ராக்கா நகரத்திலும் தீவிரவாதிகள், அரசின் கூட்டுப் படையினரால் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

இங்கிருந்து தான் சர்வதேச அளவில் பயங்கரவாத சம்பவங்களை திட்டமிட்டு ஐஎஸ் அமைப்பினர் நடத்தி வந்தனர் என்பதால், ஈராக் படையின் மைல் கல் வெற்றி என்கின்றன அந்நாட்டு ஊடகங்கள்.
tamil.oneindia.com