தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் வாஷிங்டன், கத்தாருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், கத்தாரை புறக்கணிக்கும் முடிவை நான்கு அரபு நாடுகளும் தொடரவிருக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் “போதாது” என்று செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கூறுகின்றன.
“கத்தாரை நம்பமுடியாது” என்று கூறும் இந்த நாடுகள், அதற்கு உதாரணமாக முந்தைய ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டுகின்றன.
வளைகுடா பிராந்தியத்தில் தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நான்கு நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், கத்தார் இதை மறுக்கிறது.
அல் ஜஸீரா செய்தி தொடரமைப்பை மூடவேண்டும், துருக்கியின் ராணுவத்தளத்தை மூடவேண்டும், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் மற்றும் இரானுடனான உறவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என பல நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் இரண்டு வாரங்களுக்கு முன் கத்தாருக்கு கொடுக்கப்பட்டது.
காலக்கெடு முடிந்த பிறகு கிடைத்த பதில் எதிர்மறையாக இருப்பதாக கூறிய நான்கு நாடுகளும், “அரசியல், பொருளாதார மற்றும் சட்டரீதியான” தடைகளை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செளதி அரேபியா தலைநகரில் மே மாதம் நடைபெற்ற ‘அரபு இஸ்லாமிக் – அமெரிக்க மாநாட்டில்’ கலந்துகொண்டபோது முன்மொழியப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நிதியம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, செவ்வாய்க்கிழமையன்று தோஹாவுக்கு வந்த டில்லர்சன், கத்தாருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
“எங்கள் நாடுகளின் சார்பில் நாங்கள் இருவரும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், பல வாரங்கள் நிபுணர்களுடன் தீவிரமாக விவாதிக்கப்பட்டு, ரியாத் மாநாட்டின் நோக்கத்திற்கு புத்துயிரூட்டியிருக்கிறது” என்று கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் மொகம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டில்லர்சன் கூறினார்.
“தீவிரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்கவும், முடக்கவும் தேவையான நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் எதிர்வரும் காலத்தில் எடுக்கவேண்டும். அத்துடன், சர்வதேச அளவில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என்றும் அவர் கூறினார்.
பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முதல் நாடு கத்தார் என்று கூறும் ஷேக் மொஹம்மத், முற்றுகை அறிவித்த நாடுகள், இந்த விசயத்தில் கத்தாரை பின்பற்றவேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.
தனது அண்டை நாடுகள் சிலவற்றால் தீவிரவாத அமைப்புகள் என முத்திரையிடப்பட்ட சில இஸ்லாமியக் குழுக்கள், குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளித்ததை கத்தார் ஒப்புக்கொண்டது. ஆனால், அல் கய்தா அல்லது ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இல்லை என்று கத்தார் மறுப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செளதி தலைமையிலான நாடுகள் அறிவித்த கூட்டு அறிக்கையில், தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும், இதுதொடர்பாக மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“இந்த நடவடிக்கை போதாது என்று கத்தாரை வலியுறுத்தவேண்டும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆதரவு மற்றும் அதை ஏற்றுக்கொள்வது போன்றவற்றிற்கு எதிராக கத்தார் அதிகாரிகள் எந்த அளவில் நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்பதையும் நான்கு நாடுகளும் நெருக்கமாக கண்காணிக்கும்” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
“இயல்பாக மாறுவதற்கும், சரியான பாதையில் திரும்புவதற்கும்”, அண்டை நாடுகளின் ”கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவும்” கத்தார் அதிகாரிகள் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. -BBC_Tamil