தொடர்ந்து 20 ஆண்டுகளாக ராணுவமே இன்றி செயல்பட்டு வந்த ஹைத்தி நாடு முதன் முறையாக சொந்தமாக ராணுவத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் பொருட்டு, 500 வீரர்கள் கொண்ட ராணுவத்தை உருவாக்க கரீபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஹைத்தி முடிவெடுத்துள்ளது.
இதன்பொருட்டு 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது படைகளை ஹைத்தியில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஏப்ரல் மாதம் ஐ.நா அறிவித்ததை அடுத்து, ராணுவத்தை உருவாக்கும் முயற்சியை ஹைத்தி அரசு தொடங்கியுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு ஹைத்தியின் ஜனாதிபதி ஜீன் பர்டாண்ட் எரிஸ்டீட், ஒரு ராணுவ புரட்சியை சந்தித்தார். அதன்பின்னர் ராணுவமும், துணை ராணுவப்படைகளும் சுமார் மூன்று ஆண்டுகள் வரை மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்துவந்தன. இதில் 4000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
சர்வதேச நாடுகள் பல ஹைத்தியில் தேசிய காவல் துறையை உருவாக்குவதற்காக பல பில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளன. இந்த உதவியால், பயிற்சியளிக்கப்பட்ட 15 ஆயிரம் காவல்துறையினர் தற்போது ஹைத்தியில் பணிபுரிகின்றனர்.
இந்தக் காவல்துறையை மேலும் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இயற்கைப் பேரிடர்களை சிறப்பாக நிர்வகிக்கவும், கடத்தலை தடுப்பதற்கும் ராணுவம் உதவியாக இருக்கும் என்று ஹைத்தியின் தலைவர்கள் கூறுகின்றனர்.
-lankasri.com