ராணுவ நிதிக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடகொரியர்களை ரஷ்யாவுக்கு கொத்தடிமைகளாக அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் அனுப்பியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை தன்னுடைய ஏவுகணை சோதனை மூலமாக பதற்றத்தில் வைத்திருக்கும் நாடு மாபெரும் நடனப்போட்டிகள், பள்ளி குழந்தைகளின் உடற்பயிற்சி நடனங்கள் என்று மகிழ்ச்சியான நாடாக வடகொரியா காட்சிப்படுத்தப்பட்டாலும், உண்மையில் அந்நாடு கடும் வறட்சியிலும், ஆட்சியாளரின் கோரப்பிடியிலும் சிக்கி தவித்து வருகிறது.
அங்குள்ள மக்கள் நாளுக்கு இரண்டு வேளை மட்டும் உணவு உண்ணும் அவல நிலையும் நிலவி வருகிறது.
இந்நிலையில், தொடர் ஏவுகணை சோதனை மூலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வடகொரியா அரசு, தற்போது தங்கள் நாட்டின் மக்களை கொத்தடிமையாக ரஷ்யாவுக்கு அனுப்பி வருவதாக வெளியான தகவல் சமூக ஆர்வலர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீன அரசிடம் ஒப்பந்தம் அடிப்படையில் கொத்தடிமைகளை அனுப்பி வந்த வடகொரிய அரசு, தற்போது முதல்முறையாக ரஷ்யாவுக்கு பல்வேறு வேலைகளுக்காக சொந்த குடிமக்களை அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்படும் தொழிலாளர்களின் 90 சதவீத சம்பளத்தை வடகொரியா அரசு பெற்று அதனை ராணுவத்துறைக்கு செலவு செய்யும் என்றும் அந்நாட்டில் மறைமுகமாக செயல்படும் மனித உரிமைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவில் நிலவும் மோசமான நிலை காரணமாக அப்பாவி மக்கள் எப்படியாவது வேறு நாட்டிற்கு சென்று விடலாம் என்ற ஆசையில் ரஷ்யாவுக்கு செல்ல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த கொத்தடிமை வேலைக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com