2ஜி ஊழல் விவகாரத்தில் புதிய திருப்பம்

இந்தியாவில் இடம்பெற்ற இரண்டாம் தலைமுறை கைப்தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில், கணக்குத் தணிக்கை ஆணையத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழு முன்பு அளித்த வாக்குமூலம், இந்தப் பிரச்னையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பெயர் ஆர்.பி. சிங். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்து, நாடாளுமன்றத்துக்கு அறிக்கை அளித்த சிஏஜி எனப்படும் கணக்குத் தணிக்கை ஆணையத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். குறிப்பாக, அந்த ஆணையத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்புத்துறையின் கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பு அவரிடம் இருந்தது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஏலம் விடப்படாததாலும் சில நிறுவனங்களுக்கு ஆதரவாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா நடந்துகொண்டதாலும் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கை தெரிவித்தது. அதன் அடிப்படையில்தான், ராசா பதவி விலக நேரிட்டது.

அதுதொடர்பாக விசாரணை நடத்த, எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பி.சி. சாகோ தலைமையிலான அந்தக் குழு, பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி, நேற்று திங்கட்கிழமை, ஆர்.பி. சிங் அந்தக் குழுவின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் கொடுத்தார். தனக்குக் கீழ் பணியாற்றும் மூன்று தணிக்கைத் துறை அதிகாரிகள், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு நடத்தி, கடந்த ஆண்டு தன்னிடம் அறிக்கை ஒன்றை அளித்ததாகவும் ஒதுக்கீடு வெளிப்படையாக நடக்காததால், அரசுக்கு 68 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், அவ்வாறு யூகத்தின் அடிப்படையில் இழப்புக் குறித்து கணக்கிட முடியாது என்றும், அது நமது பணியும் இல்லை என்றும் தான் அந்த அதிகாரிகளிடம் கூறியதாகவும் சிங் தெரிவித்தார்.

தனியார் நிறுவனம் ஒன்று சொல்வதை அடிப்படையாக வைத்து இவ்வாறு கணக்கிட முடியாது என்றும், அதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்குக் கூட மீட்டுக்கொள்ளப்பட்டுவிட்டதால், அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டுகூட முடிவெடுக்க முடியாது என்றும் ஆர்.பி. சிங், நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அப்படியே கணக்கிடுவதாக இருந்தாலும் கூட, சுமார் 2600 கோடி அளவுக்கு வேண்டுமானால் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதுவும் கூட முறையான கணக்கீடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

-BBC

TAGS: