அமெரிக்காவை நான் பார்த்திருக்கிறேன், அது ஒரு அசிங்கம் பிடித்த நாடு என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் அதிபரான ரோட்ரிகோ டுட்டர்ட்டே போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அது போன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
ரோட்ரிகோ டுட்டர்ட்டேவின் இந்த அதிரடி நடவடிக்கையை டிரம்ப் பாராட்டியதாகவும், அமெரிக்காவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
டொனால்ட் டிரம்ப்பின் இந்த அணுகுமுறைக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ரோட்ரிகோ டுட்டர்ட்டே அமெரிக்கா வந்தால், போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று மாஸாச்சூசெட்ஸ் மாநில பாராளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் மெக்கோவென் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரோட்ரிகோ டுட்டர்ட்டே எனது பதவிக் காலத்திலோ, அதற்கு பிறகோ, அமெரிக்காவுக்கு நான் செல்லக்கூடிய சந்தர்ப்பம் ஒருபோதும் நேராது ,அமெரிக்காவுக்குள் நான் எப்போதும் கால் பதிக்க மாட்டேன் இப்படி இருக்கையில் ஜேம்ஸ் மெக்கோவென் நான் அமெரிக்காவுக்கு வருவேன் என்று எப்படி நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவை நான் பார்த்திருக்கிறேன், அது அசிங்கம் பிடித்த நாடு. முதலில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் கைதிகளாக பிடிபட்டவர்களில் பலரை கொன்ற தங்கள் நாட்டின் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முன்வரட்டும், அப்படி இல்லை என்றால் அமெரிக்காவின் கடந்த பாவங்களின் மீது நான் விசாரணை நடத்த நேரிடும் என்று கூறியுள்ளார்.
-lankasri.com