அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள்

americarussiaஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு குடியரசு, ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தோல்வியை தழுவினார்.

ஹிலாரி தோல்வி அடையவும், டிரம்ப் வெற்றி பெறவும் ஏற்ற வகையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு உண்மை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு நம்புகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க பாராளுமன்றம் விசாரணை நடத்துகிறது.

ஆனால் அமெரிக்க தேர்தலில் தான் தலையிட்டதாக கூறுவதை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில், ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு சட்டம் இயற்றுவதில் அமெரிக்க பாராளுமன்றத்தில் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய சட்டமானது, ரஷ்யா மீது விதிக்கிற பொருளாதார தடைகளை டொனால்ட் ட்ரம்ப் அகற்றுவதற்கான திறனை குறைப்பதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ராஜ்ய ரீதியில்தான் அணுக வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறி வந்த நிலையில், இப்போது இரு கட்சிகள் இடையே ஏற்பட்டிருக்கிற உடன்பாடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அமெரிக்க ஊடகத்துறையினர் கருத்து தெரிவிக்கையில், “டிரம்பின் கருத்து என்னவாக இருந்தாலும், ரஷியாவுக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதைத்தான் இரு கட்சிகள் இடையேயான உடன்பாடு காட்டுகிறது” என்று கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “ஜனாதிபதி டிரம்ப் இந்த சட்ட மசோதா மீது தனது மறுப்புரிமையை பயன்படுத்தி நிராகரிக்க முடியும். ஆனால் அவர் அப்படிச்செய்தால் அது ரஷ்யாவுக்கு அவர் மிகவும் ஆதரவாக உள்ளார் என்ற யூகத்தை ஏற்படுத்தும்.

அதேபோன்று, மசோதாவில் கையெழுத்திட்டு, சட்டமாக்கினால் அது டிரம்ப் தனது நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையாக அமையும்” என்று குறிப்பிட்டனர்.

ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் செனட் சபை உறுப்பினருமான பென் கார்டின் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “மிகத் தீவிரமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர்தான் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மக்கள் சார்பிலும், நமது கூட்டாளிகள் சார்பிலும், ரஷ்ய அதிபர் புதினுக்கு ஒரு தெளிவான செய்தியை விடுப்பதாக இது அமைந்துள்ளது.

இந்த செய்தி, புதினை போய்ச் சேருவதில் ஜனாதிபதி டிரம்ப் உதவி தேவை” என்று கூறியுள்ளார்.

செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சுக் சூமர் கூறும்போது, “வலுவான தடைகள் விதிப்பதற்கான மசோதா தேவையான ஒன்று.

இரு தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் இந்த மசோதா சட்டமாவதற்கு இரு சபைகளிலும் சரியானபடிக்கு செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com