அப்துல் கலாமிடம் வெடிகுண்டு சோதனை நடத்திய அமெரிக்கா

பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் அவமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விமான நிலையத்தில், அப்துல் கலாமின் மேலங்கி மற்றும் பாதணி ஆகியவற்றை கழற்றும்படி கூறி அமெரிக்க அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதற்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், இந்தியா வரும் அமெரிக்க பிரமுகர்களிடமும் நாங்களும் அதுபோல் நடக்க வேண்டியிருக்கும்” என, எச்சரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.

கடந்த செப்டம்பரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற அப்துல் கலாம், 29-ம் தேதி, இந்தியாவுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார். நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதன்பின் அவர், டில்லி செல்லும் ஏர்-இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

விமானம் புறப்படுவதற்கு முன்பாக, விமானத்திற்குள் வந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், “உங்களை சோதனையிட வேண்டும். உங்களின் மேலங்கி, பாதணி ஆகியவற்றை கழற்றிக் கொடுங்கள். அதில் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என, சோதனையிட வேண்டும்” என்றனர்.

இதற்கு, அங்கு இருந்த ஏர்-இந்தியா அதிகாரிகளும், மற்றவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “அவர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர். விமான நிலையங்களில் சோதனையிட, அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

அமெரிக்க அதிகாரிகள், இதைப் பொருட்படுத்தவில்லை. கலாமும், இதை பெரிதுபடுத்தாமல், தன் மேலங்கி மற்றும் பாதணிகளை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அவற்றை சோதனையிட்டு விட்டு சில நிமிடங்களுக்கு பின் கலாமிடம் திருப்பி அளித்தனர்.

ஆனாலும், இந்த சம்பவம் குறித்து, அப்துல் கலாம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஏர்-இந்தியா அதிகாரிகள் மூலமாக, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்துக்கு, இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அப்துல் கலாம் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, அமெரிக்க அரசு, இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

TAGS: