தென்னிலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே வடக்கில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். பருத்தித்துறை திக்கம் கலாச்சார மண்டபத்தில் இளையோர்களை சந்தித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“வடக்கில் தற்போது குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் இதனை எடுத்துக் காட்டுகின்றன.
தென்னிலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே வடக்கில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிடும் கருத்துக்கள் இதனுடன் தொடர்புபடுகின்றன.
வடக்கில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவர் தீவிர போக்கை கொண்டுள்ளார் என்பது அவரின் கருத்துக்களின் மூலம் புலப்படுவதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.