அல்கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவரை 3.2 மில்லியன் பவுண்ட் கொடுத்து பிரித்தானிய அரசு மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Stephen McGown என்ற வங்கி அதிகாரி வசித்து வந்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஆப்பிரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்து மாலி நாட்டிற்கு சென்றுள்ளார்.
மாலியில் உள்ள Timbuktu நகரில் ஹொட்டல் ஒன்றில் ஸ்டீபன் தங்கியிருந்தபோது அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் அவரை கடத்தியுள்ளனர்.
ஸ்டீபனுடன் பிற நாடுகளை சேர்ந்த குடிமகன்களும் கடத்தப்பட்டனர்.
2011-ம் ஆண்டு பிரித்தானிய சிறையில் இருந்த அல் கொய்தா தீவிரவாதியான Abu Qatada என்பவரை விடுதலை செய்தால் மட்டுமே வங்கி அதிகாரி உயிருடன் திரும்புவார் என தீவிரவாதிகள் பிரித்தானிய அரசுக்கு தகவல் அனுப்பினர்.
6 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரண்டாவது கோரிக்கையாக பிணையத் தொகையும் வழங்க வேண்டும் என தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்ற பிரித்தானிய அரசு 3.2 மில்லியன் பவுண்ட் தொகையை அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த யூலை 29-ம் திகதி ஸ்டீபன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஸ்டீபன் விடுதலை ஆனதை தொடர்ந்து அவரது தந்தை மற்றும் மனைவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஸ்டீபன் கடத்தப்பட்டபோது சிறை பிடிக்கப்பட்ட அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ரோமானியா, கொலம்பியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த நால்வரும் தற்போது தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com