வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி: அமெரிக்காவின் திட்டம் அம்பலம்

north_south_001வட கொரியாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய தலைநகர் சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் பார்க் சு ஹூயூன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட கொரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் மூன் ஜே இன் தொலைபேசியில் பேசியதாகவும், அதனையடுத்து, அவர் தெரிவித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் பார்க் சு ஹூயூன் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவுக்கு எதிராக யூகிக்க முடியாத கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு சீனா மற்றும் ரஷ்யாவின் ஒப்புதலை அந்நாடு பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தடைகளின் மூலம் வட கொரியாவின் ஏற்றுமதி பெருமளவில் குறையும் என்றும் இதன் மூலம் பொருளாதார ரீதியில் அந்நாடு மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய தடைகளால், அந்நாடு அச்சுறுத்தும் போக்கை கைவிடும் என்று ஜனாதிபதி மூன் ஜே இன் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு ஏவுகணைச் சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது.

இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், அந்நாட்டுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை ஐ.நா. தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com