வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா அதிரடியாக தடை செய்துள்ளது.
சீனாவின் இந்த புதிய தடையால், ஏற்கனவே அமெரிக்கா முன்மொழிந்து ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்த பொருளாதார தடைகளால் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் வடகொரியா மேலும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் இந்த அதிரடி தடையானது நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
வடகொரியா அணுவாயுத ஏவுகணைகளை சோதனை மேற்கொள்வதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கண்டித்துள்ளது மட்டுமின்றி தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறது.
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் இருந்து தங்கள் நாட்டினை காத்துக்கொள்ளவே தமது நாடு அணுவாயுத சோதனைகளை மேற்கொள்வதாக கிம் ஜோங் உன் தெரிவித்து வருகிறார்.
இதுவரையான பல சந்தர்பங்களில் வடகொரியாவை ஆதரித்து வந்த சீனா, அந்த நாட்டுடன் 90 விழுக்காடு வர்த்தக உறவை பேணி வருகிறது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தில் வடகொரியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போதும் சீனா அந்த தீர்மானத்தை எதிர்த்து வடகொரியாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
வடகொரியா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையானது அங்குள்ள அப்பாவி மக்களை கடுமையாக பாதிக்கும் என்பது மட்டுமல்ல ஆட்சியாளர்களை துளியளவும் பாதிக்காது என சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொருளாதார தடையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சீனாவின் வர்த்தக தடையானது வடகொரியாவில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை வரும் நாட்களில் தெரியவரும்.
-lankasri.com