இலங்கையின் அரசியல் வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் தாயக மக்களின் நிலங்களை சூறையாடும் தீவிர முயற்சியில் தென்னிலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது யாவரும் அறிந்த விடயமாக உள்ளது.
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும், தமிழர்களின் காணிகளை திட்டுமிட்டு கையகப்படுத்தும் செயற்பாடு வலுவடைந்து கொண்டுதான் இருக்கின்றது.
தற்போதும் போரின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றுள்ளதுடன், சிங்களக் குடியேற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
வடக்கில் கனகராயன் குளம், மாங்குளம், வவுனியாவில் சேமமடு, கொக்கிளாய், திருக்கேதீஸ்வரம், நயினாத்தீவு, நாவற்குழி ஆகிய இடங்களில் பெளத்த விகாரைகள் புதிதாக முளைத்துள்ளன.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, இறக்காமம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றுள்ளமையை நாம் அவதானிக்க முடிகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் உள்ள தனியார் காணிகளும், கட்டடங்களுமாக பல ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. வடக்கிலுள்ள அரச காணிகளிலும், தமிழ் மக்களின் காணிகளிலும் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கை நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
அண்மையில் கொக்கச்சான்குளம் என்ற கிராமம் கலாபொபஸ்பெவே- 1, கலாபொபஸ்பெவே-2, நாமல்கம என மூன்று கிராமங்களாக சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்டு 3000 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
வவுனியா, கொக்குவெளியில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன், கொக்குவெளி என்ற தமிழ் பெயர் சிங்களத்தில் கொக்கெலிய என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் ஆக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு, கொக்கிளாய் மற்றும் நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களின் கரைவலைப்பாட்டுப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் தச்சனாங்குளத்தில் தமிழ் மக்களின் காணிகள் தற்போது ஆக்கிரமிக்கப்படுகின்றது. கட்டடம் ஒன்று கட்டப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
சிங்கள மக்கள் வசிக்காத வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நயினாத்தீவில் 67 அடி உயரமான புத்தர்சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் சிங்களக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை ஊடகங்கள் வாயிலாக நாம் அனைவரும் அறிந்த உண்மையே.
ஜனகபுர, சிங்கபுர, 13ஆம் கொலனி என்று முல்லைத்தீவின் எல்லையில் சில சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 13 ஆம் கொலனிப் பகுதியை அண்டி இப்பொழுது புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவை திருகோணமலையின் தென்னைமரவாடியை நோக்கி நகர்கின்றன.
ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் கஜபாகுபுர ஆக்கப்பட்டுள்ளன. ஒதியமலை பகுதியை நோக்கி நாளுக்கு ஒரு வீடு என்ற வகையில் சிங்களக் குடியேற்ற முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. வவுனியா மாவட்டத்தின் எல்லைப் புறம் முழுவதும் சிங்களக் குடியேற்றங்களால் சுற்றி வளைக்கப்படுகின்றது.
வவுனியாவில் மன்னார், மதவாச்சி வீதியை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறு குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
மன்னார் முசலிப் பகுதியிலும் சிங்களக்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. மன்னாரில் நரிக்காடு என்ற இடத்தில் 50 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
மடுவில் நூறு சிங்களக் குடும்பங்கள் வரையிலும், மணலாற்றில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வரையிலுமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். போரின் பின்னர் இடம்பெற்ற சட்டவிரோதக் குடியேற்றங்களே இவை.
அத்துடன், யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில்“கமுணு” விகாரை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்குள் குமாரகோவில் பிள்ளையார் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. வலி. வடக்கு வீமன்காமம் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் 30 வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த 8 வருடகாலமாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாற்றி விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியை ஆக்கிரமிக்கும் வகையில் சுவர் அமைக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மஹிந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதைய நல்லாட்சி எனக் கூறிக் கொள்ளும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்மை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
கடந்த வருடம் வடமாகாணத்தில் மொத்தமாக 13 பௌத்த விகாரைகளே அமைக்கப்பட்டதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எனவே வடக்கு கிழக்கில் கடந்த ஆட்சியிலும் சரி நல்லாட்சியிலும் சரி திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் தமிழ் மக்களின் மேலும் மேலும் அழிக்கும் செயற்பாடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காத வரையில், பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கம், வட கிழக்கு பகுதியில் அதிகரிக்கப்படும் என்பது மறுக்க முடியாத கசப்பான விடயமாகும்.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த இடங்களில் தற்போது அவர்களுக்கு சொந்தம் என்று கூறிக்கொள்வதற்கு ஒரு அடையாளம் கூட இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் தோன்றுகின்றது.
யுத்தத்தின் போது உயிர்களை இழந்தோம், உடைமைகளை இழந்தோம், உரிமைகளையும் இழந்தோம்.
தற்போது மிச்சம் இருப்பது எமது நிலம் தான். அதையும் எம்மிடமிருந்து தட்டிப்பறிக்கும் செயற்பாடாகவே இது காணப்படுவதாக மக்களின் கதறல் சத்தங்கள் காதில் கேட்கின்றன.
சொந்த நிலங்களை விட்டுவிடுமாறு, அதை மீட்டுத்தருமாறு வடக்கிலும், கிழக்கிலும் எத்தனை போராட்டங்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை சந்திப்புக்கள், நாட்களை கடந்து, வாரத்தை கடந்து, தற்போது மாதங்களை கடந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எத்தனை தமிழ் தலைமைகள் இவர்களுக்காக குரல் கொடுத்தாலும் கூட, தமிழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளை செய்து கொடுப்பதற்கு இந்த நல்லாட்சியில் யாரேனும் இல்லையா என்ற ஏக்கத்தோடு மக்கள் காத்திருக்கின்றதை அவதானிக்கலாம். இவர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? தமிழர் நிலங்களில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் விடிவு வராதா? என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-tamilwin.com
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Evlina அவர்களால் வழங்கப்பட்டு 16 Aug 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Evlina என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.